Nagaratharonline.com
 
காரைக்குடியில் நகர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?  Sep 29, 09
 
காரைக்குடி, செப். 28: குறுகலான சாலைகள், ஒருவழிச் சாலை என்ற அறிவிப்புகளால் காரைக்குடியில் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

நகராட்சி, சாக்கோட்டை, கல்லல் என 2 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது காரைக்குடி தாலுகா. தாலுகா தலைநகராக, வளர்ச்சியில் மாவட்டத்தின் முதல் நகரமாக காரைக்குடி திகழ்கிறது.

அழகப்பா பல்கலைக்கழகம், கல்லூரிகள், பள்ளிகள் என ஒரு கல்வி நகரமாகத் திகழ்கிறது காரைக்குடி. மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனம், வங்கிகளின் நிர்வாக அலுவலகம், பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் என நிர்வாக அலுவலகங்களும் காரைக்குடியில் அதிகம் உள்ளன.

காரைக்குடியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கல்லுக்கட்டி என்ற நான்கு வீதிகள், செக்காலைச் சாலை, கோவிலூர் சாலை ஆகிய பகுதிகளில் வணிக, கல்வி நிறுவனங்கள் இருந்தன. தற்போது நகரம் விரிவடைந்து வருவதால் புதிய பஸ் நிலையம், வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என புதிதாகத் தோன்றியுள்ளன.

புறநகர் விரிவாக்கத்தில் சென்னை பை-பாஸ் சாலையில் என்.ஜி.ஓ. காலனி, அரசுப் போக்குவரத்துக் கழக நகர், தாசில்தார் காலனி, பாண்டியன் நகர், திருச்சி சாலை வழியாக பர்மா காலனி, பாரி நகர், அரியக்குடி பகுதியிலும், இலுப்பக்குடி பகுதியிலும் பல ஆயிரக்கணக்கான வீடுகளால் வளர்ச்சியடைந்துள்ளது காரைக்குடி.

இந் நிலையில், சுற்றியுள்ள கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் தினசரி நகருக்கு வந்து செல்கின்றனர். ஆனால், அவர்களுக்குப் போதுமான அளவு நகர பஸ் வசதிகள் இல்லை. இதனால் நகரில் நாளுக்கு நாள் இரு சக்கர வாகனங்கள், கார் மற்றும் ஆட்டோக்கள் அதிகரித்து வருகின்றன. சுற்றுலா பஸ்கள் நகருக்குள் நுழைவதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

புதிய பஸ் நிலையத்தில் இருந்து நகரின் தெற்குப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்குச் செல்ல நகர பஸ்ஸýக்காகக் காத்திருக்கும் நிலைதான் உள்ளது.

போக்குவரத்துக் காவல் துறையினர், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினாலும், குறுகிய சாலைகள், வாகனப் பெருக்கம் ஆகிய காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்கிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய ஆய்வுசெய்து கூடுதல் நகர பஸ்கள் இயக்கினால் இப் பிரச்னைகளை ஓரளவுக்கு தீர்க்க முடியும்.

செக்காலைச் சாலை, கல்லூரிச் சாலை, நூறடிச் சாலைகளில் (ரயில்வே சாலை சந்திப்பு வரை) இரு புறமும் தார்ச் சாலை அமைத்து அகலப்படுத்த வேண்டும். நகரின் முக்கியச் சாலைகளில் திரியும் கால்நடைகளை நகராட்சி உதவியுடன் பிடித்து தனி இடத்தில் அடைப்பது, செக்காலைச் சாலை ஐந்து விளக்கு நிறுத்தத்தில் எம்.ஜி.ஆர் சிலை அருகேயுள்ள காலியிடத்தில் பஸ் நிறுத்தம் அமைப்பது, போன்றவற்றை செய்ய வேண்டும் என்கிறார் காரைக்குடி தொழில் வணிகக் கழகச் செயலாளர் சாமி. திராவிடமணி.

அவர் மேலும் கூறியது:

ராமேசுவரம் செல்லும் சுற்றுலா பஸ்கள், கார் போன்ற வாகனங்கள் செல்ல திருச்சி-ராமநாதபுரம் புறவழிச் சாலை அமைத்தால் நெரிசல் குறையும். புதிய பஸ் நிலையத்திலிருந்து தேவகோட்டை மார்க்கமாகச் செல்லும் அனைத்து பஸ்களையும் ரயில்வே பீடர் ரோடு, அரசு மருத்துவமனை, சி.மெ. வீதி, பெருமாள் கோயில், செஞ்சை வழியாகச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

மினி பஸ்களை பழைய பஸ் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல சீரான ஆட்டோ கட்டணத்தை அறிவிக்க வேண்டும்.

புறநகர் பகுதி மக்கள் பயனடையும் வகையில் கானாடுகாத்தான் வரை கூடுதல் நகர பஸ்களை இயக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (கும்பகோணம் கோட்டம்) காரைக்குடி மண்டல பொதுமேலாளர் என். பசுபதி கூறியது:

தற்போது இயக்கப்படுகிற நகர பஸ்கள் போதுமானதாக இருக்கின்றன. இருப்பினும், பொதுமக்கள் கோரிக்கை வைத்தால் கூடுதல் நகர பஸ்கள் இயக்கப்படும். அரசு 60 புதிய பஸ்களை காரைக்குடி மண்டலத்துக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் வழங்க உள்ளது. அதில் நகர பஸ்களும் இருக்க வாய்ப்பு உள்ளது என்றார்

source : Dinamani 29/09/09