Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டி பஸ் ஸ்டாண்ட் புத்தாண்டில் திறக்கப்படுமா ?  Dec 21, 15
 
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலுக்கு ஆண்டு தோறும் பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
குறிப்பாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஐயப்பன், முருக பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் பஸ்கள் வந்து செல்லும் அளவிற்கு பஸ் ஸ்டாண்ட் வசதி இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் 2012ல் நடந்த கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பிள்ளையார்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் கட்ட ரூ 1.7 கோடி மதிப்பிலான திட்டத்தை அறிவித்தார்.
இதனையடுத்து ஊராட்சிஅலுவலகம் பின்புறம் பஸ் ஸ்டாண்ட் பணிகள் துவங்கி கிடப்பில் போடப்பட்டது. பின்னர் மீண்டும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மறு டெண்டர் விடப்பட்டு கடந்த ஓராண்டாக பணிகள் நடந்தது.
10 பஸ்கள் நிற்க டிராக், 10 கடைகள், பயணியர் தங்கும் அறை,பயணியர் காத்திருப்பு அரங்கம், டிக்கெட் பதிவு அறை, கழிப்பறை, குளியலறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
தற்போது இருக்கைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பஸ் ஸ்டாண்ட் வரும் புத்தாண்டில் திறக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மூன்றாண்டுகளாக நடைபெறும் இத்திட்டப்பணி தற்போது மக்களுக்கு பயன்பாட்டிற்கு வர உள்ளது.
ஊராட்சி தலைவர் பாஸ்கரன் கூறுகையில், " தற்போது பக்தர்கள் அதிகமாக வரும் சீசன், பணிகள் முடிந்து விட்ட நிலையில், விரைவாக பஸ் ஸ்டாண்ட் திறந்தால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஊரணியின் பக்கவாட்டில் கல் பதிக்கும் பணியுடன், சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைப்பதும் பாதுகாப்பானது,' என்றார்.