Nagaratharonline.com
 
குழிபிறை அரசு நூலகத்தில் மழைநீர் : நூற்றுக்கணக்கான புத்தகங்கள் சேதம்  Dec 9, 15
 
குழிபிறை ஊராட்சியிலுள்ள அரசுப் பொது நூலகத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த தொடர் மழையால், மேற்கூரையிலிருந்து தண்ணீர் கசிந்து நூற்றுக்கணக்கான புத்தகங்கள் நனைந்து சேதமடைந்தன.

குழிபிறை ஊராட்சியில் கடந்த 1994-ல் ரூ. 1.49 லட்சத்தில் பொது நூலகக் கட்டடம் திறக்கப்பட்டது. இதில், சுமார் 28 ஆயிரம் நூல்கள் உள்ளன. 21 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டடத்தில் மேற்கூரையில் விரிசல்கள் ஏற்பட்டதால், வாசகர்கள் அச்சத்துடன் வந்து செல்லும் நிலையே உள்ளது.

இந்த நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டி நூல்களைப் பாதுகாக்க வேண்டுமென அப்பகுதி வாசகர்களும், பொதுமக்களும் அரசை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக இந்நூலகத்தில் மேற்கூரையின் விரிசல்களில் இருந்து மழைநீர் அதிக அளவில் கசிந்ததால், நூலகத்தினுள் சுமார் 1 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியது. இதனால், இங்கு அடுக்கிவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்கள் நனைந்து சேதமடைந்தன.

புதன்கிழமை காலை நூலகத்தைத் திறந்த நூலகர் வித்யா மற்றும் ஊழியர்கள் தண்ணீர் தேங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பிறகு, அனைவரும் தேங்கிநின்ற தண்ணீரை வாளிகள் மூலம் அள்ளி வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மின்கசிவு ஏற்படும் ஆபத்து இருந்ததால், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. நனைந்த

புத்தகங்களை உலரவைக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.