Nagaratharonline.com
 
NEWS REPORT: வெள்ளத்தில் வாகனங்கள் சேதம்: முழுக் காப்பீடு இருந்தால்தான் இழப்பீடு பெற முடியும்; அதிகாரிகள்  Dec 8, 15
 
வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு முழுக் காப்பீடு இருந்தால்தான் இழப்பீட்டுத் தொகை பெற முடியும் என்று காப்பீட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி லட்சக்கணக்கான இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இவ்வாறு பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு பெறுவது எப்படி என்பது குறித்து காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்
.
காப்பீட்டின் வகைகள்:
வாகனங்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களில் முழுக் காப்பீடு
("காம்பீரஹன்சிவ்'), 3-ஆவது நபர் காப்பீடு என இரண்டு வகைகள் உள்ளன.

3-ஆவது நபர் காப்பீடு என்பது அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம் ஆகும். முழுக் காப்பீடு செய்வது என்பது காப்பீடு செய்பவரின் விருப்பத்துக்கு உட்பட்டது.

முழுக் காப்பீடு ஏன் அவசியம்? 3-ஆவது நபர் காப்பீட்டின் மூலம் வாகனம் மோதி யாருக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ அவருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும்; காப்பீடு எடுத்தவருக்கு இழப்பீடு கிடைக்காது. முழுக் காப்பீடு செய்திருந்தால் மட்டுமே சாலை விபத்து, தீ விபத்து, வெள்ளம், நில நடுக்கம், திருட்டு ஆகியவற்றின்போது வாகன உரிமையாளர் இழப்பீடு கோர முடியும்.
முழுக் காப்பீடு இருந்தால்..:ஒருவர் முழுக் காப்பீடு செய்துள்ள நிலையில், இழப்பீடு கோருவது தொடர்பாக நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
வெள்ளத்தில் மூழ்கிய வாகனத்தை இயக்க முற்படக் கூடாது. முதலில் வாகனம் எவ்வாறு சேதமடைந்தது என்பது குறித்து பாலிசி எண்ணைக் குறிப்பிட்டு தொலைபேசியிலோ அல்லது மின்னஞ்சலிலோ காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். பின்னர் தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் வாகனம் இருக்கும் இடத்துக்கே வந்து ஆய்வு செய்வார்.
ஒருவேளை, வாகனத்தை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சூழலில்,
அதற்கான கட்டணத்தையும் ("டோயிங் சார்ஜ்') காப்பீட்டு நிறுவனம் வழங்கும். பின்னர், மதிப்பீட்டாளர் சேத அறிக்கை வழங்கியதும், வாகனம் தயாரிக்கப்பட்ட ஆண்டு, வகையைப் பொருத்து தேய்மானச் செலவு போக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
இதில், வாகனத்தின் பிளாஸ்டிக் பாகங்களுக்கு 50 சதவீத இழப்பீடு மட்டுமே கிடைக்கும்.
உலோக பாகங்களுக்கு ஆண்டைப் பொருத்து இழப்பீடு வழங்கப்படும். மேலும், வாகனத்தின் பாகங்களைப் பொருத்துதல், கழற்றுதல் உள்ளிட்டவற்கான கட்டணம் ("லேபர் சார்ஜ்') முழுவதுமாக வழங்கப்படும். மழை வெள்ளம் தவிர்த்து, மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவை விழுந்து சேதம் ஏற்பட்டிருந்தாலும் வாகன உரிமையாளர்கள் இழப்பீடு கோரலாம்.
தகவல் தெரிவிக்க தனி மின்னஞ்சல் முகவரி: பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் சென்னை மண்டலம், வெள்ளத்தால் சேதமடைந்த தங்கள் நிறுவன காப்பீடுதாரர்கள் தங்கள் வாகனம் குறித்த தகவல் தெரிவிக்க ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ச்ப்ர்ர்க்ஸ்ரீப்ஹண்ம்ள்ஃய்ண்ஸ்ரீ.ஸ்ரீர்.ண்ய் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கியுள்ளது.
இதனால், வேறு மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து சென்னை வந்து பாதிப்புக்குள்ளான அனைத்து நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவன காப்பீட்டுதாரர்களும் தகவல் தெரிவித்து பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்ய வேண்டியது என்ன?
வாகனங்கள் மழை, வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்தால், தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்துக்கு முதலில் தெரியப்படுத்த வேண்டும்.
சேதமடைந்த வாகனம் பாதிப்புக்குள்ளாகும்போது எந்த நிலைமையில் உள்ளதோ, அந்த நிலைமையில் புகைப்படம் எடுத்து வைத்திருப்பது நல்லது.
இழப்பீடு கோரும்போது, வாகனம் எப்படி சேதமடைந்தது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரத்துக்காக அந்தப் புகைப்படம் தேவைப்படும்.
செய்யக்கூடாதவை...1. சேதமடைந்த வாகனங்களை ஒருபோதும் இயக்க முயற்சிக்கக் கூடாது. ஒருவேளை வாகனத்தை இயக்கி, அந்த வாகனத்தின் என்ஜின் சேதமடைந்தால் இழப்பீடு கோர முடியாது.
காப்பீட்டு நிறுவனத்திடம் வாகனத்தின் சேதம் குறித்து தகவல் தெரிவிக்க தாமதப்படுத்தக் கூடாது. வெளியூரில் இருந்தாலும், தொலைபேசி மூலமாவது சேதம் குறித்துத் தெரிவிக்க வேண்டும்.
நிபந்தனைகள் தமிழில் வழங்கப்படுமா?
வாகனக் காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. போலீஸாரின் நிர்பந்தம் காரணமாகவே பலர் காப்பீடு செய்து வருகின்றனர். இன்னும் பலர் காப்பீடு செய்த பிறகு அதைப் புதுப்பிப்பதில்லை.
மேலும், வாகனத்துக்கான காப்பீடு செய்யும்போது அதற்கான விதிமுறைகள், நிபந்தனைகளை வாடிக்கையாளர்களுக்குப் புரியும் வகையில் நிறுவனங்கள் விளக்குவதில்லை. பலரும் வாகனம் விபத்துக்குள்ளான பிறகே காப்பீடு குறித்து தெரிந்துகொள்கின்றனர்.
எனவே, வாகனம் வாங்கும்போதே எந்தவிதமான காப்பீட்டை செய்துள்ளோம் என்பது குறித்து நுகர்வோர் கட்டாயம் அறிய வேண்டும். அதற்கு வசதியாக காப்பீட்டு நிறுவனங்கள் தமிழில் தங்களது நிபந்தனைகளை வழங்கினால் நுகர்வோருக்கு எளிமையாக இருக்கும் என வழக்குரைஞர் வி.எஸ்.சுரேஷ் தெரிவித்தார்.

source : DINAMANI.