Nagaratharonline.com
 
NEWS REPORT: காரைக்குடி நகர சிவன் கோயிலில் கும்பாபிஷேகம்  Aug 30, 15
 
காரைக்குடி நகரத்தார் நகர சிவன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

காரைக்குடி நகரின் மையப் பகுதியில் சுமார் 142 ஆண்டுகள் பழமைவாய்ந்த நகர சிவன் கோயில் உள்ளது. இங்கு, அருள்மிகு மீனாட்சியம்மன் உடனாய சுந்தரேசுவரர் முக்கிய மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இக்கோயிலில் சமீபத்தில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்தன. அதன்பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜையும், சனிக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமமும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை வாஸ்து சாந்தியும் நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை முதல்கால யாகபூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

பிள்ளையார்பட்டி பிச்சைக் குருக்கள் தலைமையில், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதையடுத்து, வியாழக்கிழமை காலையில் ஆறாம் கால யாகபூஜைகள் நடத்தப்பட்டு, பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், காலை 8.15 மணிக்கு கடம்புறப்பாடு நடைபெற்றது. காலை 9.10 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில், காரைக்குடி, தேவகோட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, தினமும் சமயச் சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை, காரைக்குடி நகரத்தார்கள் செய்திருந்தனர்.