Nagaratharonline.com
 
குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது அளிப்பு  Aug 10, 15
 
காரைக்குடி கம்பன் கழக நிறுவனர் சா. கணேசன் நினைவாக ஏற்படுத்தப்பட்ட கம்பன் அடிப்பொடி விருது, சனிக்கிழமை குழந்தைக் கவிஞர் செல்லகணபதிக்கு வழங்கப்பட்டது.

விருது வழங்கும் விழாவில், சாகித்ய அகாதெமி, பால புரஸ்கார் விருதுபெறும் குழந்தைக் கவிஞர் கண்டனூரைச் சேர்ந்த செல்லகணபதிக்கு, முதலாவது கம்பன் அடிப்பொடி விருதை, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வழங்கிப் பேசியது:

குழந்தைகளுக்காக பாடல் எழுதுவது மிகவும் இன்றியமையாதது, அதேநேரம் மிகவும் சிரமமான காரியம். ஆனால், அந்தப் பணியை பல ஆண்டுகளாகக் குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா செய்து வந்தார்.

இவரைப் பின்பற்றி, கண்டனூரைச் சேர்ந்த செல்ல கணபதி குழந்தைகளுக்காக பாடல்களை எழுதிவருகிறார். அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்றார். விழாவில், கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரம் பாராட்டிப் பேசினார். கவிஞர் செல்லகணபதி ஏற்புரையாற்றினார். பேராசிரியர் சொ. சேதுபதி விருதுப்பா வாசித்தார்.

கம்பன் கழக துணைத் தலைவர் அரு.வே. மாணிக்கவேலு, அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் வெ. மாணிக்கவாசகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என். சுந்தரம், ராம. சுப்புராம் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் வரவேற்றார். பேராசிரியர் மு. பழனியப்பன் நன்றி கூறினார்.