Nagaratharonline.com
 
வைகையில் எழுந்தருள்வதற்காக மதுரை புறப்பட்டார் கள்ளழகர்  May 2, 15
 
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக அழகர்கோயிலில் இருந்து சனிக்கிழமை இரவு 7.15 மணிக்கு தங்கப் பல்லக்கில் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் வேடத்தில் தோளுக்கினியனாக மதுரை நோக்கிப் புறப்பட்டார்.

மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், அழகர்மலை கள்ளழகர் திருக்கோயில் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

அதனடிப்படையில் மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் நிறைவுற்றதும், அழகர்கோயிலில் இருந்து அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் புறப்படுவது வழக்கம்.

அதன்படி,கள்ளழகர் சனிக்கிழமை மாலை மூலஸ்தானத்திலிருந்து மேற்குப் புறத்தில் உள்ள தாயார் சன்னதி அருகே தங்கப்பல்லக்கிற்கு எழுந்தருளினார்.

பின்னர், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி மண்டபத்திலிருந்து வாணவேடிக்கைகள் முழங்க, வெள்ளியக்குன்றம் ஜமீன் சண்முகராஜபாண்டியன் புலிகேசி மாட்டுவண்டியில் முன்செல்ல கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பாடானார். அவரை பக்தர்கள் சூடம், தீபாராதனை காட்டி வழியனுப்பிவைத்தனர். பலரும் பிரசாதங்களை விநியோகித்தனர். அழகருடன், ஏராளமான பக்தர்கள் கள்ளழகர், கருப்பணசாமி வேடமணிந்து சென்றனர்.

எதிர்சேவை: சனிக்கிழமை இரவு அப்பன்திருப்பதியில் சீர்பாதம் தாங்கிகள் ஓய்வெடுத்தனர். மதுரை பகுதி மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை ஞாயிற்றுக்கிழமை காலை மூன்றுமாவடியில் நடைபெறுகிறது.

சர்வேயர் காலனி, ரிசர்வ் லைன் வழியாக மதுரை நகருக்குள் வரும் கள்ளழகரை ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரை-அழகர்கோயில் சாலையில் உள்ள அம்பலகாரர் மண்டகப்படியில் மதுரை மாநகர் மக்கள் வாணவேடிக்கைகள் முழங்க வரவேற்கின்றனர்.

அன்றிரவு, தல்லாகுளம் பகுதியில் உள்ள திருக்கண்களில் அருள்பாலிக்கும் கள்ளழகர் தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருள்கிறார். அங்கு திருமஞ்சனமாகும் கள்ளழகர் பல்லக்கிலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார்.

அப்போது, அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அனுப்பிய மாலை அணிவிக்கப்படுகிறது. பின்னர் சிறப்பு பட்டாடை சார்த்தப்பட்டு தல்லாகுளம் கருப்பணசாமி திருக்கோயில் அருகே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் கள்ளழகர், பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் வழியாக வைகை ஆற்றை நோக்கி புறப்படுகிறார்.

திங்கள்கிழமை காலை வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகரை, அருள்மிகு வீரராகவப்பெருமாள் வரவேற்கிறார். சித்திரைத் திருவிழாவின் சிகரம் போன்ற இந்நிகழ்ச்சியைக் காண தல்லாகுளம், கோரிப்பாளையம் பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்