Nagaratharonline.com
 
NEWS REPORT: காசிக்கு பாதயாத்திரை செல்லும் குழுவினருக்கு காரைக்குடியில் வரவேற்பு  May 2, 15
 
ராமேசுவரத்திலிருந்து காசிக்கு பாதயாத்திரை செல்லும் குழுவினருக்கு காரைக்குடியில் நகரத்தார்கள் சார்பில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் வலையப்பட்டியைச் சேர்ந்த பச்சைக்காவடி (தேனிமலை செட்டியார்) தலைமையில் 28 பேர் கொண்ட குழுவினர் ஏப்.25ஆம் தேதி ராமேசுவரத்திலிருந்து காசிக்கு பாதயாத்திரை தொடங்கினர்.

இவர்கள் வெள்ளிக்கிழமை இரவு தேவகோட்டை வந்தடைந்தனர். சனிக்கிழமை காலையில் அங்கிருந்து புறப்பட்டு காரைக்குடி காசி நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சத்திரத்துக்கு மதியம் வந்தடைந்தனர்.

அவர்களை நகரத்தார்கள் சார்பில் வரவேற்றனர். இப்பாத யாத்திரைக்கு தலைமையேற்றுச் செல்லும் பச்சைக்காவடி தேனிமலைச் செட்டியார் கூறியதாவது: நாட்டு மக்களுக்கு மன அமைதி வேண்டி இப்பயணத்தை 12 -வது முறையாக மேற்கொண்டுள்ளோம்.

ராமேசுவரத்துக்கும் காசிக்கும் இடையிலான தூரம் 2 ஆயிரத்து 510 கிலோ மீட்டர் ஆகும். 123 நாள்கள், 6 மாநிலங்களில் இப்பயணம் மேற்கொள்கிறோம். இப்பாதயாத்திரை ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி உத்திரப் பிரேதச மாநிலத்தில் நிறைவடைகிறது என்றார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் காரைக்குடி ஞானம் கார்ட்ஸ் நிறுவனர் எஸ்ஒய். பழனியப்பன், அழகப்பா பல்கலைக்கழக துணைப்பதிவாளர் காளைராஜன், நகரத்தார் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.