Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டையில் அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் அவதி  May 2, 15
 
நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் தினமும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

நாட்டரசன்கோட்டை பேரூராட்சி பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, காளையார்கோவில் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. காளையார்கோவில் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மாதம் ஒரு முறை பராமரிப்பு பணி நடக்கும் போது பகலில் மின்தடை செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தினமும் 9 மணி நேரம் முதல் 11 மணி நேரம் வரை தொடர் மின் தடை செய்யப்படுகிறது. ஏதேனும் ஒரு பகுதியில் பழுது பார்க்கும் பணி நடந்தாலும், நகர் முழுவதும் மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: பகல் முழுவதும் மின்தடை செய்வது பராமரிப்பு பணிகள் செய்வதற்குத் தான். ஆனால் தொடர்ந்து பல நாள்கள் பகல் முழுவதும் மின்தடை செய்வது ஏன் என மின்வாரிய அலுவலர்களை கேட்டால் அவர்கள் சரியான பதில் சொல்வதில்லை. ஒரு பகுதியில் பணிகள் நடந்தால் நகரின் அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன? நாட்டரசன்கோட்டை பேரூராட்சிக்கான இணைப்பில் சுற்றுப்பகுதியில் சில கிராமங்களுக்கும் மின் இணைப்பு உள்ளதால் அந்த கிராமங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டாலும் இங்கு மின்தடை செய்யப்படுகிறது. இந்த மின் தடைக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.