Nagaratharonline.com
 
காரைக்குடி : 77-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் தொடக்க விழா  Apr 2, 15
 
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் 77-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் தொடக்க விழா கம்பன் மணிமண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் தருண்விஜயின் தமிழ்த்தொண்டு ஆர்வத்திற்காக கம்பன் கழகம் சார்பில் "அருந்தமிழ் ஆர்வலர்' எனும் விருதினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் வழங்கினார்.

விருதுபெற்ற தருண் விஜய், கம்பன் திருநாள் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: உலகப்புகழ்பெற்ற ஷேக்ஸ்பியருக்கு இணையானவராக கவிசக்கரவர்த்தி கம்பன் திகழ்கிறார். கம்பன் நம் தேசத்தின் இணையற்ற மகாகவி. அவரது படைப்பான ராமாவதாரம் எனும் கம்பராமாயணம் நம்நாட்டிற்கு ஈடில்லா பங்களிப்பாக உள்ளது. கம்பர் தொன்மைவாய்ந்த இந்திய நாட்டிற்கு தமிழன்னை வழங்கிய அருங்கொடை.

எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் வகையில் சிந்தனை சிற்பியாக கம்பரின் புலமை விளங்குகிறது. கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும் என்று போற்றப்படுவதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இப்படி சிறப்பு மிக்க மகா கவிஞரின் சமாதியை, எனது திருவள்ளுவர் திருப்பயணத்தின் போது நான் பார்த்தேன். அவரது சமாதியை மேம்படுத்த வேண்டும். ஷேக்ஸ்பியரின் பிறந்த இடத்தை லண்டனில் சிறப்பாக அமைத்து போற்றுகிறார்கள். அவருக்கு இணையான கவிசக்கரவர்த்தியின் சமாதியை மிகவும் சிறப்புவாய்ந்ததாக மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன்.

மேலும் கம்பன் கழகத்தை தோற்றுவித்தவர் கம்பன் அடிப்பொடி சா. கணேசன். அவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட அஞ்சல் துறையில் சம்பந்தப்பட்டவர்களை அனுகி அதனை வெளியிடச்செய்வேன். மிகச்சிறந்த தமிழ் அமைப்பாக கம்பன் கழகம் திகழ் கிறது. சுற்றுலாத்துறை மூலமாக காரைக்குடியை தேசிய வரைபடத்தில் இடம்பெறச் செய்வேன், என்றார்.

விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் தலைமை வகித் துப் பேசினார். விழாவில் பேராசிரியை சரசுவதி ராமநாதன் எத்தனை மேலாண்மை சூட்சுமங்கள் எங்கள் கம்பனிடம் என்ற சொற்பொழிவு நூலை வெளியிட்டுப்பேசினார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கவிஞர் வள்ளி முத்தையா பரிசுகளை வழங்கிப்பேசினார்.