Nagaratharonline.com
 
அமெரிக்காவில் ஹிந்துக் கோயில் அவமதிப்பு  Feb 17, 15
 
 
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள ஹிந்துக் கோயிலை அவமதிக்கும் வகையில் அதன் சுவரில் நாஜிக்களின் ஸ்வஸ்திக் சின்னத்தையும், "வெளியேறு (கெட் அவுட்)' என்ற வாசகத்தையும் மர்ம நபர்கள் சனிக்கிழமை வரைந்துள்ளனர்.

சியாட்டில் பெருநகரப் பகுதியிலுள்ள பாத்தெல் நகரில் அமைந்துள்ள அந்தக் கோயில் மகா சிவராத்திரிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்குத் தயாராகி வந்த நிலையில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது அமெரிக்க ஹிந்துக்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சமூகங்களிடையே வெறுப்பை வளர்க்கும் தீய நோக்குடன் இந்தச் செயல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஸ்னோஹோமிஷ் மாவட்ட ஷெரீஃப் அலுவலகம் தெரிவித்தது.

மாவட்ட உயர் அதிகாரிகள் அந்தக் கோயிலை திங்கள்கிழமை பார்வையிட்டனர்.

இதுகுறித்து அந்தக் கோயிலின் அறங்காவலர் நித்ய நிரஞ்சன் கூறியதாவது: அமெரிக்காவில் இதுபோன்ற செயல்களுக்கு இடமில்லை. சுவரில் எழுதியவர்களுக்கு யாரையும் நாட்டை விட்டு வெளியேறச் சொல்லும் உரிமை இல்லை.

அமெரிக்கா என்பது குடியேற்றவாசிகளால் உருவாக்கப்பட்ட நாடு. ஏற்கெனவே கோயில் சுவரில் ஒரு சில உருவங்களை மர்ம நபர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரைந்திருந்தனர். எனினும் அதில் வாசகங்கள் எதுவும் எழுதப்படாததால் அதனைப் பெரிதுபடுத்தவில்லை என்றார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்தக் கோயிலின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் அண்மையில்தான் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.