Nagaratharonline.com
 
செம்பனூரில் பாலம் கட்டும் பணி மாற்றுப்பாதை இன்றி மக்கள் அவதி  Feb 19, 10
 
கல்லல் ஒன்றியம் செம்பனூரில் மாற்றுப் பாதை அமைக்காமல் பாலம் கட்டுவதால், இப்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர்.கல்லல் - மதகுபட்டி ரோட்டில் செம்பனூர் பஸ் ஸ்டாண்ட் அருகே 15 லட்சம் ரூபாய் செலவில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. செம்பனூர், சொக்கநாதபுரம், மதகுபட்டி, பாகனேரி வழியாக மதுரை, சிவகங்கை செல்லும் பஸ்கள், கல்லல், காரைக்குடிக்கு செல்லும் பஸ்கள் இந்த பாலத்தை கடந்து தான் செல்லவேண்டும். ஒரு மாதத்திற்கு முன் இங்கு புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது.மாற்றுப்பாதை இல்லை:

இந்த பாலம் கட்டுமான பணியை துவக்கிய நெடுஞ்சாலைத்துறையினர், மாற்றுப்பாதை அமைக்கவில்லை. இதனால், டூவீலர்களை தவிர மற்ற அனைத்து வாகனமும் மீனாட்சிபுரம், முத்துபட்டி வழியாக 20 கி.மீ.,சுற்றி கல்லல் செல்கிறது. இதனால், ஒரு மணிநேரத்திற்கும் மேலாக காலவிரையம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மதுரையிலிருந்து வரும் பஸ்கள் கல்லல் செல்லாமல், செம்பனூருடன் திரும்பிவிடுகிறது.பாலம் கட்ட ஆரம்பித்த நாளில் இருந்தே திருப்புத்தூர் - கல்லலுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கீழக் கோட்டை, கொட்டகுடி, சடையன்பட்டி, சொக்கநாதபுரம், வெள்ளஞ்சன் பட்டி, கொட்டாம்பட்டி கிராம மக்கள் பஸ் வசதியின்றி அவதிக்குள்ளாகின்றனர். செம்பனூர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளும் வரமுடியாமல் தவிக்கின்றனர். பாலத்தை விரைந்து கட்டவேண்டும். அதுவரையான போக்குவரத்திற்கு மாற்றுபாதை உடன் அமைக்கவேண்டும்.

source : DINAMALAR