Nagaratharonline.com
 
நகரத்தார் பள்ளி ஆண்டு விழா  Feb 8, 10
 
பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது அவர்களது சொந்தக் கருத்தை திணிக்க வேண்டாம் என தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 88-வது ஆண்டு விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மைத் துறை இயக்குநர் கலியமூர்த்தி கூறினார். அவர் மேலும் பேசியது:

துவக்கக் கல்வி பயிலும் குழந்தைகளிடம் எதிர்காலத்தில் என்ன பதவிக்கு வர விரும்புகிறாய் என்று கேட்டால் உடனே மருத்துவர், பொறியியல் வல்லுநர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்று பதில் வருகிறது.

ஆனால் பட்டம் வாங்கி வெளியில் செல்லும் மாணவர்களிடம் கேட்டால் எந்த உறுதியான பதிலும் வருவதில்லை. இதற்குக் காரணம் பெற்றோர்கள் சொன்ன காரணத்தினால் அந்தத் துறையைத் தேர்வு செய்து படித்ததுதான். அவர்கள் விரும்பிய கல்வி பெற முடியவில்லை. எனவே அவர்களுக்கென்று எந்த நோக்கமும் குறிக்கோளும் இல்லை.

குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்குள் அவர்களை அறியாமலேயே இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வர பெற்றோர்கள் விரும்புவதில்லை.

தாங்கள் விரும்பும் அல்லது விரும்பிப் படிக்க முடியாதத் துறையைத் தேர்வு செய்து அவர்களை அந்தத் துறையில் சேர்த்து விடுவதைத் தவிர்க்க வேண்டும். விளையாட்டு, இசை எதில் ஆர்வம் இருந்தாலும் அதை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கலியமூர்த்தி பேசினார்.

முன்னதாக நகரத்தார் சங்கச் செயலர் தியாகராஜன் வரவேற்றார். தலைமை ஆசிரி யர் கணேசன் அறிக்கை வாசித்தார். கோவை தொழிலதிபர் நடேசன், அவரது மனைவி சாந்தி ஆகியோர் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினர். உதவித் தலைமை ஆசிரியர் வெங்கடாச்சலம் நன்றி கூறினார். இதில் நகர்மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், தி.மு.க. நகரச் செயலர் மதார்சேட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


source : Dinamani