Nagaratharonline.com
 
புதுக்கோட்டை பிரிக்கப்படுமா?  Feb 3, 10
 
​ தமிழகத்தின் பெரிய கோட்டமும் நிர்வாக ரீதியாக பொதுமக்கள் அதிகம் பிரச்னைகளைச் சந்திக்கும் கோட்டமுமான புதுக்கோட்டை வருவாய்க் கோட்டத்தைப் பிரிக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

​ ​ ​ ​ முந்நூறு ஆண்டு காலம் தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியின் கீழ் இருந்த புதுக்கோட்டை சமஸ்தானம் கடந்த 3.3.1948-ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.​ தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய்க் கோட்டமாக இருந்து வந்த நிலையில்,​​ கடந்த 1974,​ ஜனவரியில் அப்போதைய முதல்வர் மு.​ கருணாநிதியால் தமிழகத்தின் 15-வது மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் உதயமானது.

​ ​ ​ ​ ​ தனி மாவட்டமான பிறகு,​​ புதுக்கோட்டை வருவாய்க் கோட்டத்துடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த கந்தர்வகோட்டை,​​ அறந்தாங்கி,​​ ​ கீரமங்கலம் ஆகிய பகுதிகளும் இணைக்கப்பட்டன.

​ ​ ​ ​ சுமார் 4600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில்,​​ முதல்கட்டமாக அறந்தாங்கி,​​ புதுக்கோட்டை ஆகிய 2 வருவாய்க் கோட்டங்கள் உருவாக்கப்பட்டன.​ 13 ஊராட்சி ஒன்றியங்கள்,​​ 11 வட்டங்கள்,​​ 498 ஊராட்சிகள்,​​ 758 வருவாய்க் கிராமங்கள் என்று இந்த இரு கோட்டங்களும் அமைந்திருக்கின்றன.

​ ​ ​ ​ இந்த இரு கோட்டங்களில் திருமயம்,​​ பொன்னமராவதி,​​ குளத்தூர்,​​ கந்தர்வகோட்டை,ஆலங்குடி,​​ கறம்பக்குடி,​​ இலுப்பூர் ஆகிய 8 வட்டங்கள் புதுக்கோட்டை வருவாய்க் கோட்டத்திலும் அறந்தாங்கி,​​ மணமேல்குடி,​​ ஆவுடையார்கோயில் ஆகிய 3 வட்டங்கள் அறந்தாங்கி வருவாய்க் கோட்டத்திலும் இருக்கின்றன.

​ ​ ​ ​ இதில் புதுக்கோட்டை வருவாய்க் கோட்டத்தில் ​ மாவட்டத்தின் பெரும் பகுதிகள் இணைந்துள்ளதால் மாநிலத்திலேயே மிகப் பெரிய வருவாய்க் கோட்டமாக இது திகழ்கிறது.​ கேட்பதற்கு "பெரிய' என்ற சொல்லாடல் பெருமைக்குரிய விஷயம்போல காட்சியளித்தாலும்,​​ நிர்வாக ரீதியில் இது பெருமைக்குரிய விஷயமல்ல என்பதே உண்மையாகும்.

​ ​ ​ ​ ​ ஏனெனில்,​​ அரசின் செயல்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தில் ஆணையாகப் புறப்பட்டு,​​ கிராம நிர்வாகத்தில் செயலாக மாற இடையில் முக்கியப் பங்காற்றுவது கோட்ட நிர்வாகம்தான்.

​ ​ ​ ​ ​ சட்டம்,​​ ஒழுங்கு,​​ வருவாய்த் துறை சிவில் வழக்குகள்,​​ தாவாக்கள்,​​ சமூக நலத் திட்டங்கள்,​​ அரசுத் திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு,​​ ஆய்வுப் பணிகள்,​​ வகை மாற்றம்,​​ ஆக்கிரமிப்பு அகற்றம் ஆகியவற்றில் தொடங்கி திருமணமாகி ஏழாண்டுகளுக்குள் இறக்கும் பெண்களின் சாவு குறித்த விசாரணை,​​ ஜல்லிக்கட்டு வரை சகலப் பணிகளும் கோட்ட நிர்வாகத்திலேயே இருக்கின்றன.

​ ​ ​ ​ ​ ஆகையால்,​​ பெருவாரியான மக்கள் தம் தேவைகளுக்கும் பிரச்னைகளுக்கும் கோட்டாட்சியரையே அணுக வேண்டிய நிலையுள்ளது.

​ ​ ​ ​ ​ ​ இந்நிலையில்,​​ நிர்வாக ரீதியாக நீடித்துவரும் பணிச்சுமை காரணமாக சாதாரண பிரச்னைகளுக்குக்கூட புதுக்கோட்டை கோட்டத்தில் பொதுமக்கள் அலைவதும் காத்திருப்பதும் அன்றாட நிகழ்வாகியிருக்கிறது.​ அதிகப் பணிச் சுமையால் அலுவலர்கள் ஒரு பக்கம் போராட,​​ பொதுமக்கள் மற்றொரு பக்கம் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

​ ​ ​ ​ ​ ​ தமிழகத்தில் கொடைக்கானல் கோட்டம் ஒரேயொரு வட்டத்துடன் செயல்படுகிறது.​ பல மாவட்டங்களில் இரண்டு அல்லது மூன்று வட்டங்களுடன் பல கோட்டங்கள் செயல்படுகின்றன.​ ஆனால்,​​ புதுக்கோட்டை கோட்டமோ இன்னமும் 8 வட்டங்களுடன் தள்ளாடுகிறது.

​ ​ ​ ​ இதுகுறித்து புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.​ நெடுஞ்செழியன் கூறியது:

​ ""அதிகாரப் பரவலாக்கம் என்பதே மக்களாட்சியின் தத்துவம்.​ இதைக் கருத்தில் கொண்டே பல மாநிலங்களும் மாவட்டங்களும் பிரிக்கப்பட்டன;​ பிரிக்கப்படுகின்றன.

​ ​ ​ ​ ​ தமிழகத்தில் வெறும் மூன்று வட்டங்களை மட்டுமே கொண்ட பெரம்பலூர் ஒரு மாவட்டமாகச் செயல்படுகிறது.​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ஆனால்,​​ புதுக்கோட்டை கோட்ட பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருவது வேதனைக்குரியது.​ ​ ​ புதுக்கோட்டை மக்கள் கோரிக்கைகள் பல இந்த அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.​ இப்போது அதற்கு மேலும் ஓர் உதாரணமாக இந்தப் பிரச்னை'' என்றார் நெடுஞ்செழியன்.

​ ​ ​ ​ ​ ​ இதுகுறித்து ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.​ ராஜசேகரன் கூறியது:

​ ​ ​ ​ ​ ""பெரிய கோட்டமாக இருப்பதால் பல்வேறு பிரச்னைகளை பொதுமக்கள் அன்றாடம் சந்திக்க வேண்டியிருக்கிறது.​ இதைத் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.​

​ ​ ​ ​ ​ ஆலங்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய்க் கோட்டத்தை உருவாக்கலாம்.​ இதுகுறித்து துணை முதல்வர் மு.க.​ ஸ்டாலின் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஐ.​ பெரியசாமி ஆகியோரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே மனு அளித்தேன்.​ ஆனால்,​​ இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை'' என்றார் ராஜசேகரன்.​

​ ​ ​ ​ ​ நிர்வாகப் பிரச்னை என்பது அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கக் கூடிய பிரச்னை.​ ஆனால்,​​ அரசு இந்த விஷயத்தில் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் கருதுகிறார்கள்.​ புதுக்கோட்டை கோட்டத்தை இரண்டாகப் பிரித்து இப்பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


source : Dinamani