Nagaratharonline.com
 
கோவிலூரில் இலக்கிய ஆன்மிக சிந்தனைப் பட்டிமன்றம்  Aug 5, 14
 
கோவிலூர் ஆதீனத்தில் ஆடிப்பூரத்திருவிழாவையொட்டி இலக்கிய ஆன்மிக சிந்தனைப்பட்டிமன்றம் நடைபெற்றது.
கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் பட்டிமன்றத்தைத் தொடக்கி வைத்துப்பேசினார்.

பெரியபுராணத்தின் புகழுக்கு பெரிதும் காரணம் சரித்திரக் கூறுகளா, பூகோளக் கூறுகளா என்ற தலைப்பில் கவிஞர் சோமசுந்தரத்தை நடுவராகக் கொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது. பேராசிரியர் நா. சுப்பிரமணியன், டாக்டர் மா.சிதம்பரம், டாக்டர் நா. வள்ளி ஆகியோர் சரித்திரக்கூறுகளே.. என்ற தலைப்பிலும், டாக்டர் கரு. முத்தையா, கவிஞர் நீ.ரவிச்சந்திரன், பேராசிரியர் ம.கார்மேகம் ஆகியோர் பூகோளக்கூறுகளே.. என்ற தலைப்பிலும் வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களின் அடிப்படையில் நடுவர் சோமசுந்தரம் தனது தீர்ப்பில் கூறியதா வது: சேக்கிழார்தான் பெரியபுராணம். பெரியபுராணம்தான் சேக்கிழார். அநபாய சோழனின் வரலாற்றுப்புகழ் மிக்க காலத்தில் சேக்கிழார் அவரிடம் முதலமைச்சராகப் பணியாற்றினார். ஆகவே நாடுமுழுவதும் அவரால் பயணம் செய்யமுடிந்தது. எல்லாச் சரித்திர, பூகோளச்செய்திகளையும் திரட்ட முடிந்தது. சீவகசிந்தாமணியைப் படித்த மன்னனுக்குச் சிவனடியார் கதைகளைப் படிக்குமாறு சேக்கிழார் ஆலோசனை கூறுகிறார்.

அதற்குரிய சைவ நூல் காப்பியம் இல்லையே என்று மன்னன் கூறியபொழுது, சேக்கிழார் 63 சிவனடியார்களின் சரித்திரத்தை 4,253 பாடல்களில் திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் ஒரு சிறந்த தமிழ்க்காப்பியமாக எழுதி அதனை தில்லைக்கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் சித்திரை திருவாதிரை முதல் மறு சித்திரை திருவாதிரை வரை ஓராண்டு காலம் அரங்கேற்றினார். மன்னன் அநபாய சோழன் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் அதனை கேட்டு மகிழ்ந்தனர். மன்னர் சேக்கிழாருக்கு தொண்டர் சீர் பரவுவார் என்ற பட்டம் வழங்கி, பட்டத்து யானையில் அவரை அமரவைத்து மன்னரே அவருக்கு இரட்டைக்கவரி வீசிச் சிறப்பித்தார். பெரிய புராணம் முழுவதும் சரித்திரம், அதில் உள்ள பூகோளக்குறிப்புகள் மிக அற்புதமானவை.

அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் நாடு முழுவதும் நடந்து பக்தியைப் பரப்பிய செய்திகள் சேக்கிழார் பாடல்களில் உள்ளது. நாட்டின் பூகோளம் நம் கண்முன் விரிகிறது. இன்றும் அவர் காட்டிய அடிச்சுவட்டில் நாம் பயணம் செய்யலாம். எனவே பெரிய புராணம் என்பது பூகோளத்தோடு இணைந்த சரித்திரக்குறிப்புக்களைக் கொண்டிருப்பதால் இன்றும் பெரும் புகழ்கொண்டிருக்கிறது. சரித்திரம் உயிர். பூகோளம் உடல். ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை என்று தீர்ப்பளித்தார்.நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அய்க்கண், குமரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.