Nagaratharonline.com
 
நற்சாந்துப்பட்டி நாகதேவி நல்லதங்காள் கோயிலில் நாக பஞ்சமி விழா  Aug 4, 14
 
நற்சாந்துப்பட்டி நாகதேவி நல்லதங்காள் கோயிலில் நாக பஞ்சமி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் குழந்தைப்பேறு, திருமணத்தடை விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற நாக பஞ்சமி யாகம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான விழா கடந்த 31-ம் தேதி சுவாமி வீதிஉலாவுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், கோ வழிபாட்டுடன் நாக பஞ்சமி யாகம் தொடங்கியது. காலை 8.30 மணிக்கு பக்தர்கள் முளைப்பாரி, பால்குடம், அக்னி காவடி எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, நாகதேவி நல்லதங்காள், கோட்டை பெரியகருப்பர், சின்னகருப்பர், பொற்பனை மகாமுனீஸ்வரர், அடைக்கலம் காத்தார், முப்புலி அய்யனார், சந்நியாசியார், சாவக்காரர், அண்ணன்மார் எழுவர், அன்புத்தங்கை பிச்சி, பெரிய அடைக்கனார், சின்னஅடைக்கனார் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பிறகு, அன்னதானமும், பெண்கள் சார்பில் பிச்சி அம்மனுக்கு சீர்வரிசை செய்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பிற்பகலில் நல்லதங்காள் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை காலை கோட்டை கருப்பர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

விழாவின் நிறைவுநாளான ஞாயிற்றுக்கிழமை பொங்கல் திடலில் இருந்து நல்லதங்காள் அம்மன் கோயில் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியும், அன்று இரவு பிச்சி அம்மன், அடைக்கலங்காத்தார், பட்டவன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.