Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி தேரோட்டம்  Jun 11, 14
 
நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில், வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் கண்நோய் தீர்க்கும் கண்கண்ட தெய்வம் என, அனைத்து பக்தர்களாலும் பிரசித்தி பெற்றது கண்ணுடைய நாயகி அம்மன் கோயில். இங்கு, கண் நோய் நீங்கவேண்டி, கண்மலர் நேர்த்தி செலுத்தினால், உடனே நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. அதே போன்று பிள்ளைவரம் வேண்டுவோரின் நேர்த்தியும் நிறைவேறியுள்ளது.

இச்சிறப்பு பெற்ற கோயிலில் வைகாசி விழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.
ஏழாம் நாள் விழாவில் தங்கரதம்; எட்டாம் நாளில் வெள்ளி ரத புறப்பாடு நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று, காலை 10:15 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் கண்ணுடைய நாயகி அம்மன் எழுந்தருளினார். அதை தொடர்ந்து, சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர், பக்தர்கள் தேர் வடம் பிடிக்க, தேரோட்டம் நடந்தது. முன்னதாக, மூஷிக வாகனத்தில் விநாயகர் தனி சப்பரத்தில் எழுந்தருளினார். தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி, நேற்று பகல் 12:30க்கு நிலையை அடைந்தது.
10ம் நாளான இன்று, காலை10:30 மணிக்கு, அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்தி செலுத்துவர்.