Nagaratharonline.com
 
நேமத்தான்பட்டியில் நகர விநாயகர் கோயிலில் திருவாசக விழா !  May 2, 14
 
நேமத்தான்பட்டி நகர விநாயகர் கோயிலில் திருவாசக விழா நடைபெற்றது.

96 ஊர் நகரத்தார் பாதயாத்திரைக்குழு, திருநாவுக்கரசர் இறை பணிமன்றம் மற்றும் நேமத்தான்பட்டி நகரத்தார் ஆகியோரது சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் கவிஞர் அரு. சோமசுந்தரன் தலைமை வகித்துப் பேசுகையில், தமிழுக்கு வேதம் திருவாசகமா கும். 51 பதிகங்கள், 658 பாடல்களில் மாணிக்கவாசகர் பக்தியைப்பொழிந்து உருக்கமாக தன் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், நமக்குரிய வாழ்க்கை நெறிகளையும், வரலாற்றுச் செய்திகளையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். நாம் தொடர்ந்து படித்தால் பக்தி கடலில் மூழ்கிவிடுவோம்.

காரைக்கால் அம்மையார் போல மாணிக்கவாசகர் தலையினால் நடந்துள்ளார். அதனைத் தலையினால் நடந்தேன் விடைப்பாக என்று தன்பாடலில் தெரிவிக்கிறார். கோபத்தால் நாம் மூப்படைவோம் என்பதை மாணிக்கவாசகர் முனிவால் யானும் மூக்கின்றேன் என்கிறார். ஆகவே கோபத்தையும், ஆசைகளையும் விடச்சொல்லும் மாணிக்கவாசகர் விடுமின் வெகுளி வேட்கை நோய் என்கிறார். எனவே நல்ல வாழ்க்கை நெறிகளை அளிக்கும் திருவாசக விழா ஒவ்வொரு ஊரிலும் நடைபெறவேண்டும் என்றார். விழாவில், கோயில் அறங்காவலர் அண்ணாமலை வரவேற்றார். சொக்கலிங்கம், பாதயாத்திரைக்குழு செயலர் மாணிக்கம், நாச்சியப்பன் ஆகியோர் திருவாசகம் பற்றி பேசினர். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முடிவில் மாணிக்கம் செட்டியார் நன்றி கூறினார்.