Nagaratharonline.com
 
நகரத்தாரின் பாரம்பரிய பொங்கல் விழா : நாட்டரசன்கோட்டையில் உற்சாகம்  Jan 20, 10
 
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில், நாட்டுக்கோட்டை நகரத்தாரின் (செட்டியார்), பாரம்பரிய "செவ்வாய் பொங்கல்' விழா உற்சாகமாக நடந்தது. ஆண்டு தோறும், தை பொங்கலை அடுத்து வரும், செவ்வாய் அன்று இவ்விழா நடக்கும். வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் இவ்வூரை சேர்ந்தவர்கள், தவறாமல் விழாவில் பங்கேற்பது வழக்கம். கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் முன் ஒன்று கூடி, பொங்கல் வைத்து வழிபடுவர். இச்சமூகத்தினரின் இளைஞர், இளைஞிகளுக்கு வரன் தேடும் படலமும், இவ்விழாவில் அரங்கேறும்.




முதல் பொங்கல்: நேற்று நடந்த இவ்விழாவில் 877 குடும்பத்தினர் பங்கேற்றனர். குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட சண்முகம் குடும்பத்தினருக்கு, கோயில் சார்பில் முதல் மரியாதை செய்யப்பட்டது. முதல் பொங்கல் பானையை, அக்குடும்பத்தினர் வைத்தனர்.




வெளிநாட்டினர்: பல மாதங்கள் கழித்து உறவினர்களை பார்த்த நெகிழ்ச்சியில், நலம் விசாரித்து மகிழ்ந்தனர். விழாவை காண அமெரிக்கா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு வங்கத்தில் இருந்து, 20 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர். மாட்டு வண்டிகளில் அமர்ந்து, அங்குள்ள நகரத்தார் பங்களா, பிரசித்தி பெற்ற இடங்களை பார்த்தனர். வெளிநாட்டினர் கரகாட்டம் ஆடி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அம்மனுக்கு ஆராதனைகள் நடந்தன. இரவில் தங்கரதம் உட்பிரகார வலம் வந்தது.




ஜெர்மனை சேர்ந்த டான்ஜா கூறியதாவது: இந்தியாவிற்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன். விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடக்கும் இவ்விழா, தமிழர்களின் பெருமையை உணர்த்துகிறது, என்றார்.




பாகனேரி: பாகனேரியில் நடந்த செவ்வாய் பொங்கல் விழாவில்,480 குடும்பத்தினர் பங்கேற்றனர். புல்வநாயகி அம்மன் கோயிலில் பொங்கலிட்டு, வழிபாடு நடந்தது. இரவு 7 மணிக்கு, பொங்கல் பானைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. முதல் பொங்கல் வைத்த ராமநாதன் குடும்பத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டது.


source : Dinamalar