Nagaratharonline.com
 
NEWS REPORT: பொங்கல் பண்டிகையில் சூரியனை வழிபாடுவது ஏன்?  Jan 13, 14
 
பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. தீயினால் புதுப்பானையில் (நிலம்) உள்ள அரிசி (நிலத்தின் பயன்) நீரில் வெந்து பொங்கலாகிறது. பொங்கலைப் படைத்து சூரியனை வழிபடுகின்றவர்கள், ஐம்பெரும் பூதங்களையே வழிபடுகின்றனர் என்பது ஐதீகம்.

அசையும் பொருள்கள் அனைத்திற்கும் சூரியனே உயிர் தருகிறான் என்கின்றன, வேதங்கள் !இந்த வழிபாடு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி நிச்சயமாக ஒன்றும் கூறமுடியவில்லை கிமு 2000 - க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை இந்தியர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.நம்நாடு சூரிய வெப்பம் மிகுந்த நாடு. ஆகவே, அவன் அருளைப் பெற அவனை மக்கள் வழிபட முற்பட்டதில் வியப்பில்லை. பல நோய்களை சூரிய கிரணங்கள் குணப்படுத்துவதாக அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறான்.

சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று மக்கள் நம்பினார்கள். சூரியனுக்காகக் கட்டிய புராதனக் கோயிலில் ஒன்று ஒரிஸ்ஸாவிலுள்ள கொனார்க் கோயில். கலிங்கத்தை ஆண்ட நரசிங்கதேவன் (கி.பி 1238--64) இதைக் கட்டினான்.இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காண கிடைக்காத வேலைப்பாடு மிக்கவை.தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனார் கோயில் என்ற இடத்தில் சூரியனுக்கென்று தனி ஆலயமே இருக்கிறது. சூரியனைப் பரம்பொருளாக ஆதித்திய ஹிருதயம் கூறுகிறது.

சூரிய நமஸ்காரம் என்பது உடற்பயிற்சி, யோகப் பயிற்சியுடன் கூடிய வழிபாடு. தை மாதம் முதல் நாள் - சூரியன் மகர ராசிக்குள் (உத்தராயணம்) பிரவேசிக்கும் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு சூரிய வழிபாடு நடத்துகிறார்கள். சுற்றும் உலகுக்கே சூத்திரமாக விளங்கும் சூரியனின் பெருமை இன்று சுருங்கிப்போய் விட்டது. என்றாலும், பொங்கல் திருநாளில் மட்டும் ஆதித்தனைப் போற்றும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.