Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூர் கோவில் தங்கக் கவசத் திருப்பணி ஆறு ஆண்டாக இழுபறி  Nov 23, 13
 
இரணியாசூரனை வதைக்க, தேவர்கள் கோஷ்டியாகக் இத்தலத்தில் கூடி செய்த பிரார்த்தனையை அடுத்து, இறைவன் நாராயணன், நரசிம்ம அவதாரம் எடுத்ததால் இத்தலம் திருக்கோஷ்டியூர் என்றழைக்கப்படுகிறது. இங்கு சவுமியநாராயணப்பெருமாள் கோயில் உருவானது. இந்திரன் பூஜித்த சவுமியநாராயணப்பெருமாள் உற்சவராக உள்ள சிறப்பை பெற்றது. ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற தலம்.இந்த சிறப்புக்களைப் பெற்ற இக்கோவிலுக்கு,மேலும் சிறப்பைத் தருவது, இக்கோவிலின் அஷ்டாங்க திவ்ய விமானம்.

பெருமாளின் திவ்ய மங்கள திருமேனியாகவே, இவ்விமானம் பக்தர்களால் வணங்கப்படுகிறது. இவ்விமானத்தில் தான், ராமானுஜர் எழுந்தருளி மகா மந்திரத்தை மக்கள் அனைவருக்கும் உபதேசித்தார்.அவருடைய திருஉருவமும் இந்த விமானத்தில் உள்ளது.அஷ்டாங்க விமானத்தின் வடபக்கம் நரசிம்மர் இருக்கிறார். அவருக்கு அருகில் ராகு,கேது இருப்பது வித்தியாசமான தரிசனம்.இந்த சிறப்பு மிக்க விமானத்திற்கு தங்கக் கவசத் திருப்பணி செய்ய,சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயில் என்பதால்,சமஸ்தான அனுமதியுடன், "ஸ்ரீ சவும்ய நாராயணன் எம்பெருமானார் சாரிடபிள் ட்ரஸ்ட்'முன் வந்தது. 2007ம் ஆண்டில் சுமார் ரூ.60 கோடி மதிப்பில் இத்திருப்பணியை நிறைவேற்றதிட்டமிடப்பட்டது.

பின்னர்,விமானத் திருப்பணிக்கான பாலாலயம் நடந்து,திருப்பணியும் துவங்கியது.விமானத்தில் இருந்த சுதை சிற்பங்கள் அகற்றப்பட்டு,அந்த வடிவிலான தாமிர தகடு பதிக்கும் பணி நடந்தது. தற்போது 6 ஆண்டுகளுக்குமேலாகியும் தாமிரத் தகடு பதிக்கும் பணி முழுமையடைய வில்லை.மழை காலங்களில் விமானத்தின் வழியே நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் இக்கோவிலின் தங்க விமானத் திருப்பணி விரைவாக முழுமையடைய வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பமாக உள்ளது.