Nagaratharonline.com
 
செட்டிநாடு பாத்திரதொழில் பின்னடைவு : தொழிலாளர் பற்றாக்குறை  Jan 11, 10
 
காரைக்குடி கணேசபுரம் பகுதியில் பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பு தொழில் நடக்கிறது. தெக்கூர், சப்பட்ட சர்வம், அண்டா உள்ளிட்ட செட்டிநாடு பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதுதவிர ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி, காளஸ்திரியில் தயாராகும் உருளி (உருண்டை) வகை பாத்திரங்களும் இங்கு விற்கப்படுகின்றன. ஆனால், இங்கு தயாராகும் செட்டிநாடு பானைகளுக்கு வெளிமாவட்டங்களில் அதிக வரவேற்பு உள்ளது. இப்பானைகளை உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் வாங்கி விற்பதில் போட்டி உள்ளது. பித்தளை பாத்திர தொழிலுக்கு தேவையான தகடுகள் திருப்பூர், மதுரை, காரைக்குடி பகுதிகளிலுள்ள "ரோலிங் மில்லில்' இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடினமான தகடால், தயாராகும் செட்டிநாடு பாத்திரங்களுக்கு தமிழகம் முழுவதும் கிராக்கி உள்ளது. சீர்வரிசைகளுக்கு முக்கியத்தும் பெறும் இப்பானைகள் பொங்கலை முன்னிட்டு அதிகமான விற்கப்படும்.
தொழிலில் நலிவு: கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட பித்தளை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தன. நாளொன்றுக்கு 100 முதல் 200 கிலோ வரை பாத்திரங்கள் உற்பத்தி நடந்தது. ஒவ்வொரு பட்டறையிலும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர். இவர்களுக்கு 100 முதல் 200 ரூபாய் வரை அதிகமாக சம்பளம் வழங்கப்பட்டதால் ஆண்கள், பெண்கள் போட்டிக் கொண்டு இத்தொழிலில் ஈடுபட்டனர். சில ஆண்டுகளாக தொழிலில் ஏற்பட்ட நலிவால் படிப்படியாக உற்பத்தி குறைந்து தற்போது ஐந்துக்கும் குறைவான தொழிற்சாலைகளே உள்ளன. விலை வாசி உயர்வால் தகடுகளின் விலையேற்றம் அதிகமானதையடுத்து இத்தொழிலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிக நேரம் நெருப்பில் உழைக்க வேண்டியிருப்பதால் தொழிலாளர்கள் இத்தொழிலுக்கு நிரந்த முழுக்கு போட்டு மாற்று தொழில் செய்கின்றனர். முகூர்த்த காலங்களிலும் இத்தொழில் சுறுசுறுப்பின்றியே காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேறு வழியின்றி தொடர்ந்து இத்தொழில் ஈடுபட்டு வருவது வேதனையான விஷயம்.
வியாபாரி எஸ். சேகர்: நான் கடந்த 10 ஆண்டுகளாக பித்தளை பாத்திரங்கள் விற்பனை தொழில் செய்கிறேன். ஏழு ஆண்டுகளுக்கு முன் இருந்த வியாபார சுறுசுறுப்பு தற்போது இல்லை. விலை வாசி உயர்வால் பித்தளை தயாரிப்பு தொழில் நலிவடைந்துள்ளது. இதனால் பாத்திரங்களின் விலை கடந்தாண்டை விட 20 சதவீதம் உயர்ந்துள்ளது. பொங்கலை முன்னிட்டு அனைத்து கடைகளிலும் வியாபாரம் சூடு பிடிக்கும். தற்போது "டல்' அடிக்கிறது. இதற்கு கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பும் ஒரு காரணம். கிலோ 220 விற்கப்பட்ட பித்தளை பாத்திரங்கள் தற்போது 250 முதல் 275 வரை கூடுதலாக விற்கப்படுகிறது. வேலைக்கு தகுந்த சம்பளம் கிடைக்காததால், பலர் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். தொழிலாளர்களின் பற்றாக்குறையால் தினமும் 50 முதல் 100 கிலோ வரை தான் பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. நகர் புறங்களை விட, கிராமத்தில் இருந்து தான் அதிகமான விவசாயிகள் பாத்திரங்களை வாங்கிச் செல்வர். தற்போது விவசாயிகளின் வருகை குறைந்துள்ளது. வியாபாரத்திலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

source : Dinamalar