Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகருக்கு பிரமாண்ட கொழுக்கட்டை படைத்து சதுர்த்தி விழா  Sep 11, 13
 
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் சதுர்த்தி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கற்பக விநாயகருக்கு பிரமாண்ட கொழுக்கட்டை படைத்து வழிபட்டனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10 திருநாளான நேற்று சதுர்த்திப் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

பக்தர்கள் வசதிக்காக நெரிசலை தவிர்க்க தடுப்புகளால் சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. நீண்ட வரிசையில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர். அதன்பின் 9.30 மணிஅளவில் விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் தெப்பக்குளத்தில் எழுந்தருளினார்.

அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. சக்கரத்தாழ்வார் மற்றும் அங்குசதேவருக்கு பன்னீர், பால், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. பிச்சை குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்பின் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சுற்றி வந்து கோவில் மண்டபத்தை அடைந்தார். இதனை தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் சாற்றப்பட்டது. தங்கக்கவசத்தில் மூலவர் அருள்பாலித்தார்.

மதியம் 1.30 மணி அளவில் 18 படி அரிசியால் தயார் செய்யப்பட்ட பிரமாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டு விநாயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது. காலை முதல் இரவு வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்தனர். இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி ராமநாதன் செட்டியார் (வலையபட்டி), கண்ணன் செட்டியார் (காரைக்குடி) ஆகியோர் செய்திருந்தனர்.