Nagaratharonline.com
 
NEWS REPORT: FLATS வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்  Jul 13, 13
 
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது வீட்டின் அளவுகள் பற்றிய விவரத்தை தெரிந்து கொள்வதில் சிலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. அதனால் எத்தனை சதுர அடியில் வீடு வாங்கி இருந்தாலும் தனி வீட்டை ஒப்பிடும்போது பார்ப்பதற்கு சிறியதாக இருப்பதுபோல் தோன்றும். அதற்கு காரணம் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டின் அளவுகள் குறிப்பிட்ட விதங்களில் பிரிக்கப்பட்டு கணக்கிடப்படுகிறது. அதுபற்றிய விவரங்களை ஓரளவு தெரிந்து கொண்டால் வீட்டை வாங்கும்போது தெளிவு பெறுவதுடன் அது சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம். வீட்டின் அளவுகள் வகைப்படுத்தப்படும் விதம் பற்றி பார்ப்போம்.

Carpet Area :

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டின் உள் அளவுகளை குறிப்பது தான் கார்பெட் ஏரியா. அதாவது 4 சுவர்களுக்கு இடைப்பட்ட அளவை கணக்கிடுவதாகும். அறையின் உள்பகுதியை சுற்றிலும் உள்ள நீள, அகலங்களை அளந்து கார்பெட் ஏரியாவை தெரிந்து கொள்ளலாம்.

Plinth Area :

இது சுவருடன் வீட்டின் உள் அளவையும் சேர்த்து குறிப்பிடுவதாகும். அதாவது கார்பெட் ஏரியாவுடன் சுவரின் தடிமன் எவ்வளவு இருக்கிறது என்பதையும் சேர்த்தால் பிளின்த் ஏரியா கிடைத்து விடும். வெளிச்சம், காற்று வீட்டுக்குள் வருவதற்காக ஏற்படுத்தப்பட்ட வெற்றிடங்களை உள்ளடக்கிய பரப்பளவையும் கொண்டு இருக்கும்.

அடுக்குமாடி குடியிருப்பை பொறுத்தவரை பிளின்த் ஏரியா 1000 சதுர அடியாக இருந்தால் கார்பெட் ஏரியா 600 முதல் 650 சதுர அடி வரை இருக்கும்.

Super built up Area ;

வீட்டின் சுவரை உள்ளடக்கிய பிளின்த் ஏரியாவின் அளவில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பது சூப்பர் பில்ட் அப் ஏரியா எனப்
படுகிறது. இது பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் இடத்தையும் சேர்த்து கணக்கிடப்படுகிறது. குறிப்பாக நடைபாதை, மாடிப்படி, லிப்ட், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவற்றின் அளவுகளை பிளின்த் ஏரியாவுடன் இணைத்து சூப்பர் பில்ட் அப் ஏரியா கணக்கிடப்படும்.

UDS :

அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதுர அடி மனை சொந்தம் என்பதை குறிப்பதாகும். இது ‘பிரிக்கப்படாத மனைப் பரப்பு’ என்று அழைக்கப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்பின் மொத்த சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப கணக்கிடப்படுகிறது.

இந்த விஷயங்களை தெரிந்து கொண்டால் வீட்டின் அளவை கணக்கிடுவதில் குழப்பம் ஏற்படாது. இதுதவிர விதிமுறை மீறாமல் கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறதா? என்பதை சரி பார்க்க வேண்டும்.

மேலும் சுவர்களுக்கு இடையே உள்ள தரையின் அளவை (கார்பெட் ஏரியா) துல்லியமாக அளந்து விட வேண்டும். அதற்கு ஏற்ப பிளின்த் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா அளவுகள் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

Common Area ;

பொதுவாக பிளின்த் ஏரியாவில் இருந்து சூப்பர் பில்ட் அப் ஏரியா 15 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் எதற்காக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கட்டாயம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். சில இடங்களில் கட்டப்படும் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், நீச்சல் குளம், தோட்டம், வாக்கிங் செல்லும் நடைபாதை போன்றவற்றிற்கு ஏற்ப சூப்பர் பில்ட் அப் ஏரியா 30 முதல் 35 சதவீதமாக இருக்கும்.

அதாவது பொது பயன்பாட்டு இடங்கள், பார்க்கிங் என பொதுவான வசதிகள் அதிகமானால் அதற்கு ஏற்ப சூப்பர் பில்ட் அப் ஏரியா அதிகரிக்கும். அதனால் கார்பெட் ஏரியா அளவு குறைந்து கொண்டே வரும். எனவே அடுக்குமாடி குடியிருப்பில் பிரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டு இருக்கும் அளவுகள் சரிதானா? பொது பயன்பாட்டு இடங்கள் அனைவரும் உபயோகப்படுத்தும் விதத்தில் இருக்கிறதா? என்பதை சரி பார்த்து கொள்ள வேண்டும்.