Nagaratharonline.com
 
காளைகளுக்கு பயிற்சி; வெண்கல மணி தயாரிப்பு : களை கட்டும் ஜல்லிக்கட்டு  Jan 5, 10
 
ஜல்லிக்கட்டு "சீசன்' துவங்கியுள்ளதால், மாடுகளுக்கு கழுத்தில் அணியும் வெண்கல மணிகள் தயாரிப்பு பணி சிங்கம்புணரியில் களை கட்டியுள்ளது.ஜல்லிக்கட்டில் வீரத்தை போல, காளைகளை அழகுபடுத்தும் மணி முக்கிய பங்கு வகிக்கிறது. புகழ் பெற்ற அரளிப்பாறை, சிராவயல், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற் கும் காளைகளின் கழுத்தை சிங்கம்புணரி வெண்கல மணிகள் அலங்கரிக்கின்றன. மணி தயாரிக்கும் தொழிலில், கூத்தாடி அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.மூலப்பொருட்களான வெண்கல மணி நிலக்கோட்டையிலும், எருமை தோல் ஈரோட்டிலும் வாங்குகின்றனர். இதோடு இறக்குமதியாகும் கம்பளி நூல் பயன்படுத்தப்படுகிறது.கன்று, காளைகள் என வெவ்வேறு அளவுகளில் கலைநயமிக்க மணி தயாரிக்கப்படுகிறது. பாலமேடு, அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவில் மணி வாங்குகின்றனர்.மணி தயாரிக்கும் சின்னச்சாமி கூறியதாவது:முன்பு ஆண்டு முழுதும் நடந்த ஜல்லிக்கட்டு, கோர்ட் தடையால் மூன்று மாதம் மட்டுமே நடக்கிறது. தொழில் பாதித்து சிரமப்படுகிறோம். தரமான வெண்கலத்தில் தயாரகும் அரியக்குடி மணி நல்ல ஓசையிருக்கும். இதன் விலை 5,000 ரூபாய்.மற்ற மணிகள் 1,000 முதல் 3,000 ரூபாய் மட்டுமே.ஒரு மணி செய்தால் 300 ரூபாய் கூலி கிடைக்கும். தொழில் நலிவடைந்ததால், செருப்பு தயாரிக்கும் தொழில் துவங்க அரசு உதவ வேண்டும், என்றார்.காளைகளுக்கு பயிற்சி:சிங்கம்புணரி அரளிப்பாறை, சிராவயல் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை தயார் படுத்தும் பணியில் உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காளையர்களை சமாளிக்க ஏற்ற வகையில் உணவு கொடுப்பது, லாடம் கட்டுதல், முட்டுவதற்கு பயிற்சி,குளத்தில் நீந்த விடுதல் என பணிகள் "ஜரூராக' நடக்கின்றன.காளை உரிமையாளர் கார்த்திக் கூறியதாவது:பேரிச்சை, பருத்தி கொட்டை, எள் புண்ணாக்கு என சிறப்பு உணவு அளிக்கிறோம். திடலில் காளைகளை நீண்ட கயிற்றில் கட்டி பயிற்சி அளிக்கிறோம். காளை பிடிகொடுக்காமல் வெற்றி பெற்றால் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் விலை உயரும். விலைவாசி உயர்வால் பராமரிப்பு செலவு அதிகமாகிறது. செலவு அதிகரித்தாலும் பாரம்பரிய ஜல்லிக்கட்டை மறக்க முடியவில்லை, என்றார்.


source : dinamalar