Nagaratharonline.com
 
நவீன எரிவாயு தகன மேடை திறக்கப்படுமா? திருவொற்றியூர்வாசிகள் சந்தேகம்  May 23, 13
 
திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் அருகே, பல ஏக்கர் நிலப் பரப்பில், 1.25 கோடி ரூபாய் செலவில், நவீன எரிவாயு தகன மேடை, 2011ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதில், ஈமச் சடங்கு அரங்கு, சோடியம் ஆவி விளக்குகள் என, அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டது.

எரிமேடையை பராமரிக்கும் பணி, பட்டினத்தார் பொதுசேவா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை, ஏழை மக்களும் பயனடையும் வகையில், சடலம் எரிப்பதற்கு, 1,500 ரூபாய் கட்டணமாக வசூலித்தனர். சடலங்களை எரிக்கும் பணிக்காக, ஏற்கனவே சுடுகாட்டில் பணிபுரிந்த, 11 ஊழியர்களை நியமித்தனர்.
இரண்டு வாரங்கள் மட்டுமே தொடர்ந்து இயங்கிய நிலையில், எரியூட்டு தகன மேடை பராமரிப்பு செலவு மற்றும் ஊழியர்களின் சம்பளம் என, செலவு, 25 ஆயிரம் ரூபாயை எட்டியது.
அதற்கேற்ப வருவாய் இல்லாததால், சிக்கன நடவடிக்கையாக, ஐந்து பணியாளர்களை அறக்கட்டளை நிர்வாகம் நீக்கியது. பணி இழந்தோருக்கும், அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, பராமரிப்பு பணியில் இருந்து அறக்கட்டளை விலகியது. பழையபடி சடலங்கள், வெளியில் எரியூட்டப்பட்டன. எரிவாயு தகன மேடை காட்சி பொருளாகியது.
விரைவில்...
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது, புதிதாக, ஒரு தனியார் நிறுவனம் மூன்றாண்டுக்கு ஒப்பந்தம் எடுக்க முன் வந்துள்ளது. இன்னும், ஒருசில வாரங்களில் தகனமேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என்றார்.