Nagaratharonline.com
 
ஓ.சிறுவயலில் கண்மாய் நீர் ஒரு குடம் விலை ரூ.5 ஆக உயர்வு  May 15, 13
 
ஓ.சிறுவயலில் கண்மாய் தண்ணீர் ஒரு குடத்தின் விலை ரூ.5க்கு விற்கப்படுகிறது.வரலாறு காணாத வறட்சியால், இந்த ஆண்டு பெய்ய வேண்டிய மழை பொய்த்தது. கோடை காலம்,சுட்டெரிக்கும் அனலாய் கொதிக்கிறது.

காலை 10மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை உள்ளது. நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே சென்று வருகிறது. இதனால், வீடுகளில் கிணறு வைத்தவர்கள், போர்வெல் போடவும், போர்வெல் போட்டவர்கள், அதன் ஆழத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் உள்ளனர். இப்படி தண்ணீருக்காக தங்களுக்கு தெரிந்த வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால், அங்குள்ள கண்மாய் நீரையே பருகி வருகின்றனர்.

கண்மாயில் நீர் எடுக்க முடியாதவர்கள் தள்ளுவண்டி மூலம் வரும் தண்ணீரை வாங்கி கொள்கின்றனர். தண்ணீருக்குரிய தட்டுப்பாட்டால், காய்கறிகளை போல இதன் விலையும் ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இது குறித்து ஓ.சிறுவயலை சேர்ந்த காளியம்மா கூறும்போது: ஓ.சிறுவயல் பருப்பூரணி, பொன்னழகி அம்மன் கோயில் ஊரணி தண்ணீரை இங்குள்ளவர்கள் இன்றளவும் குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். இந்த தண்ணீரில் சமைக்கும்போது சாதம் உடனே கெட்டுப்போகாது. போர்வெல் தண்ணீர்மூலம் சமைத்தால் ஒரு நேரத்துக்கு மட்டுமே சமைக்க முடியம். மேலும், பருப்பு, காய்கறி வேக வைக்கவும் இதையேதான் பயன்படுத்துகிறோம். இந்த தண்ணீரை குடித்தால் தான் தாகம் நிற்கும், என்றார்.