Nagaratharonline.com
 
NEWS REPORT: தூத்சாகர் அருவி, கோவா  Mar 7, 13
 
 
பால் கடல்' எனும் பெயரை இந்த தூத்சாகர் அருவிக்கு யார் சூட்டினார்களோ தெரியவில்லை. இந்த அருவி மகாசமுத்திரம் போன்று ஒங்காரமிட்டவாறு சீறிக்கொண்டு மலையுச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அழகு காணக்கிடைக்காத காட்சி. இந்த கவின் கொஞ்சும் அருவி பனாஜி நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடக-கோவா எல்லையில் அமைந்திருக்கிறது.

உலகின் மிக அழகிய அருவிகளில் ஒன்றாகவும், 310 மீட்டர் உயரத்திலிருந்து விழுவதால் இந்தியாவின் 5-வது உயரமான அருவியாகவும் கருதப்படும் தூத்சாகர் அருவி கோவா வனத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்த அருவியின் கம்பீரத்தையும், பேரழகையும் பரிபூரணமாக கண்டு ரசிக்க நீங்கள் மழைக் காலத்தில் வருவதுதான் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் அருவியை நோக்கிச் செல்லும் சாலை மழைக் காலங்களில் மூடப்பட்டிருப்பதோடு, அக்டோபர் மாதத்திற்கு பின்புதான் திறந்துவிடப்படும்.

தூத்சாகர் அருவியை ரயில் மூலமாக சுலபமாக அடையலாம். இந்த அருவியின் அருகாமை ரயில் நிலையமாக கால்லெம் ரயில் நிலையம் அறியப்படுகிறது.

புராணம் கூறும் செய்தி
தூத்சாகர் அருவிக்கு அருகே காணப்படும் அடர்ந்த வனத்தினுள்ளே அமைந்திருக்கும் ஏரி ஒன்றில் முன்னொரு காலத்தில் அழகான ராஜகுமாரி ஒருத்தி தினமும் நீராடி வந்தாள்.
அப்படி ஒரு நாள் அவள் ஏரியில் குளித்துக் கொண்டிருக்கும்போது ராஜகுமாரன் ஒருவன் அவள் நீராடும் அழகை மறைந்திருந்து ரசித்து கொண்டிருந்தான். இந்தக் காட்சியை கண்ட ராஜகுமாரி பாலினை போன்ற ஏரி நீரினை ஒரு குவளையில் எடுத்து தன்னை மறைத்தவாறு தனக்கு முன்னே ஊற்றலானாள். அந்த நீரானதுதான் தற்போது மலையுச்சியிலிருந்து கொட்டிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.