Nagaratharonline.com
 
பர்மா தேக்கு; பெல்ஜியம் கண்ணாடி செட்டிநாடு வீடுகளில் கலை நயம் : பாரம்பரியம் தக்க வைக்கப்படுமா?  Dec 31, 09
 
பழைய செட்டிநாடு பங்களாக்களில் பிரித்து எடுக்கப்படும் ராஜநிலை, கலை பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
காரைக்குடி, பள்ளத்தூர், கானாடுகாத்தான், ஆத்தங்குடி பகுதிகளில் பாரம்பரிய செட்டிநாடு பங்களாக்கள் உள்ளன. கலைநய வேலைப்பாடு கொண்ட எழில் கொஞ்சும் இவை, பல ஆண்டுகள் கடந்தும் கம்பீர காட்சியளிக்கின்றன.
சிறப்பு: வீடுகளில் பயன்படுத்தப்பட்ட கலை பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டு, நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டது தனி சிறப்பு. பர்மா தேக்கு மரம், பெல்ஜியம் கண்ணாடிகள், நிலையை சுற்றி பதிக்க ஜப்பான் கண்ணாடிகள் என அடுக்கி கொண்டே போகலாம். பராமரிக்கப்படாமல் பாழடைந்த பங்களாக்களில் இருந்து இப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு கதவு, ஜன்னல், நிலை என தனித்தனியாக விற்கப்படுகின்றன. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர், வெளிநாட்டினர் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதால், அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
ராஜ நிலை: பங்களா முன் வாசலில் உள்ள நிலை இவ்வாறு அழைக்கப்படுகிறது. 7 முதல் 12 அடி உயரத்தில் நுணுக்கமான வேலைப் பாடுகள் இருக்கும். இன்றைய கால கட்டத்தில் இதுபோன்ற நிலைகள் செய்ய முடியாது என்ற கருத்து நிலவுகிறது.
சென்னை, கோவை, பெங்களூரு மற்றும் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வசிப்போர், இந்த அரிய நிலைகளை வாங்கி செல்கின்றனர். குறிஞ்சிக்கல் (மர தூணை தாங்கும் அடிப்பாகம்), போதிரை (தூண் மேல்பாகம்), தூண் என செட்டிநாடு கலை கலை பொருட்களுக்கு மவுசு இன்னும் குறையவில்லை.
தக்க வைக்க வேண்டும்: பாரம்பரிய செட்டிநாடு கலை பொருட்கள் வெளி மாநிலம், நாடுகளுக்கு விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. இம்மண்ணை விட்டு அகன்று, கலை பொருட்கள் இருந்ததற்கான சுவடு கூட இல்லாத நிலை உருவாகும். தொல் பொருள் ஆராய்ச்சி போல தேட வேண்டிய நிலை கூட ஏற்படலாம். பழம் பெருமைமிக்க செட்டிநாடு கலை பொருட்களை தக்க வைக்க தமிழக அரசு, சுற்றுலா துறையினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

source : Dinamalar 01/01/2010