Nagaratharonline.com
 
கண்ணதாசன் மணிமண்டபத்தை மறைத்து வைத்திருந்த டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்  Dec 9, 12
 
தினமணியில் வெளியான செய்தியைத் தொடர்ந்து காரைக்குடியில் கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபத்தை மறைக்கும் விதமாக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

கவியரசர் கண்ணதாசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் கவியரசருக்கு மார்பளவு உருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தை சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டு அங்கு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவ்வளாகத்திற்குள் செட்டிநாடு சுற்றுலா அலுவலகமும் செயல்படுகிறது.

இந்த மண்டபத்தை மறைக்கும்விதமாக அரசியல் கட்சியினர், தனி நபர், சங்கங்கள் நடத்தும் விழாக்கள் எதுவாக இருந்தாலும் விளம்பர டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. கண்ணதாசன் மணிமண்டபத்தின் அழகை மறைக்கும் விதமாக ஒரு சங்கத்தினர் பிரமாண்டமான பேனர்கள் வைத்திருந்தனர். இதை தினமணி நாளிதழ் வெள்ளிக்கிழமை படத்துடன் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் கண்ணதாசன் மணிமண்டபத்தை மறைக்கும் விதமாக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை உடனே அகற்ற உத்தரவிட்டார்.