Nagaratharonline.com
 
NEWS REPORT: குழந்தை பேறு தரும் சஷ்டி விரதம்  Oct 27, 12
 
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது தமிழில் பரவலாகக் கூறப்படும் பழமொழிகளில் ஒன்று. சஷ்டி (சட்டி) விரதம் இருந்தால் அகப்பையில் (கருப்பையில் குழந்தை) வரும் என்று பொருள் கூறுகின்றனர். இங்கு அகப்பை என்பதை கருப்பை என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது.

மனசுக்கும் அகம் என்று பொருள் உண்டு என்பதால், மனதளவில் உள்ள குழப்பங்களுக்கும் சஷ்டி விரதம் பலனளிக்கும். இறைவனின் அருள் கிடைப்பதன் மூலமாக பொருள் கிடைக்கலாம். இதனை கடைப்பிடிக்கும் முறைகளை பார்க்கலாம்:-

ஐப்பசி வளர்பிறை பிரதமையில் துவங்கி, சஷ்டி வரை ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படும் கந்த சஷ்டி விரதம் அளவிடற்கரிய பலன்களை அளிக்கவல்லது. இதை வசிஷ்ட மாமுனிவரே கூறியுள்ளார். அவரது இந்தக் கூற்றை ஏற்ற தேவகுருவான பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டு, வலன் என்ற அசுரனை அழித்தான் இந்திரன்.

“உபவாசம்’ என்றால் “விரதமிருந்து கடவுளோடு வாசம் செய்வது’ என்று பொருள். எனவே உபவாச நாட்களில் மனம், மொழி, செயல்களால் கடவுளை இடையறாமல் வழிபட வேண்டும். ஐப்பசி மாத சஷ்டி, சூரசம்ஹாரம் நடைபெற்ற திருநாள். ஆகவே இந்த சஷ்டியை “மஹா சஷ்டி’ என்கின்றனர்.

இந்த நாளில் இருக்கும் விரதம், கந்தனது அடியார்களை அவனுடைய அருள் வெள்ளத்தில் ஆனந்தமாக மிதக்க வைக்கும். ஆறு நாள்களும் விரதமிருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளான சஷ்டியன்று மட்டும் விரதமிருக்கலாம். ஆறாம் நாள் இரவில் உறங்கக்கூடாது; பகலிலும் உறக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

கந்த சஷ்டி விரதம் நீர் விரதம், பால் விரதம், மெüன விரதம் என்று மூன்று வகைப்படும்.விரத காலத்தில் சோர்வாக இருந்தால், புனித தீர்த்தம் அல்லது சாதாரண நீரை மட்டும் பருகுவது நீர் விரதம். பாலை மட்டும் பருகுவது பால் விரதம். உண்ணா நோன்புடன் மௌனமாக இருந்து மனதுக்குள் முருகனின் திருப்பெயர்களையும் உச்சரித்துக் கொண்டிருப்பது மௌன விரதம்.

ஒரு வகையில் பேச்சும் அடங்கி, மனமும் ஒடுங்குவதே மௌன விரதம். விரத வகைகளில் இது உச்ச நிலைக் கடுமையுடையது. மௌன விரதத்தின்போது மனதினை அடக்குவது மிகவும் புண்ணியம். ஆறு நாள் முழுவதும் மேற்கூறியபடி விரதமிருந்து ஏழாம் நாளன்று நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து வேகவைத்து உண்டு விரதத்தை முடிக்கலாம். பகலுணவு உட்கொண்ட பிறகு உறங்கக்கூடாது. அந்திக்குப் பின் விரைவில் உறங்கச் செல்லலாம்.