Nagaratharonline.com
 
பஸ் ஸ்டாண்ட் இன்றி மக்கள் அவதி  Dec 21, 09
 
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் வசதியின்றி பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.இங்கு பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மாவட்டத்திலேயே பெரிய பேரூராட்சி இது.

சிவகங்கை, காளையார்கோவிலில் உள்ள உயர்,மேல் நிலைப்பள்ளி, கல்லூரிக்கு செல்ல வாக்காத்துப்பட்டி, கண்டானிபட்டி, கவுரிபட்டி, திருவேலங்குடி கிராமத்தை சேர்ந்த மாணவர், ஆசிரியர், அரசு ஊழியர்கள் பஸ்சுக்காக இங்கு வருகின்றனர். பல ஆண்டுகளாக பஸ் ஸ்டாண்ட், நிழற்குடை, குடிநீர், கழிப்பறை வசதி இல்லை.மழை, வெயிலில் பல மணி நேரம் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் இங்கு வரும் ஒன்றிரண்டு பஸ்களும் முறையாக நின்று பயணிகளை ஏற்றி செல்வதில்லை. இதனால் பெண்கள் உட்பட அனைவரும் ஓடிச்சென்று தான் பஸ் ஏறுகின்றனர். கோயில், சற்றுலா நகரமாக விளங்கும் இங்கு பஸ் ஸ்டாண்ட் கட்ட மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.மக்கள் கருத்து:நாட்டரசன்கோட்டையை சேர்ந்த எஸ்.செல்வக் குமார்: பிரசித்தி பெற்ற கோயில் நகரான இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் பஸ்கள் சரியாக வருவதில்லை. பற்றாக்குறையால் 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அவதிக்குள்ளாகின்றனர். காலையில் மாணவர்கள் சிவகங்கை செல்லும் மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். பல ஆண்டுகளாக இங்கு பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.




நாட்டரசன்கோட்டையை சேர்ந்த பி.விஜிகண்ணன்: பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் பெரும்பாலான பஸ்கள் நாட்டரசன்கோட்டைக்குள் வராமல் சிவகங்கை - தொண்டி மெயின்ரோட்டிலேயே சென்று விடுகிறது. பஸ் ஸ்டாண்ட் கட்டி கட்டாயம் அனைத்து பஸ்களும் இங்கு வரவேண்டும். ஊருக்குள் ரோடுகள் குறுகலாக இருப்பதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் லாத்தன்குடி கண்மாய் வழியாக மெயின்ரோட்டிற்கு புதிய ரோடு போட்டால் பஸ்கள் அதிகளவில் வரும்.பேரூராட்சி தலைவர் முருகானந்தம் (தி.மு.க.,): ""ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் வணிக வளாகம், சிறிய பஸ் ஸ்டாப்கள், இருக்கை வசதி ஏற்படுத்த 2.89 கோடி ரூபாய்க்கு சுற்றுலாத்துறை மூலம் திட்டம் தயாரித்துள்ளேன். பஸ் ஸ்டாண்ட் உள்ள தனியார் இடத்தை அவர்கள் தானாமாக பேரூராட்சிக்கு வழங்குமாறு பொதுமக்கள் சார்பில் கேட்டுள்ளேன். அந்த இடம் கிடைத்தால் 33 லட்சம் ரூபாயில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும்'' என்றார்.


source ; dinamalar22/12/09