Nagaratharonline.com
 
தீபாவளிக்கு 500 சிறப்பு விரைவு பஸ்கள்: நாளை முன்பதிவு தொடக்கம்  Sep 15, 09
 
சென்னை, செப். 14: தீபாவளிப் பண்டிகைக்காக சென்னையில் இருந்து 500 சிறப்பு பஸ்களை இயக்க, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (எஸ்.இ.டி.சி.) திட்டமிட்டுள்ளது.

இதற்கான முன்பதிவு செப்டம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு தீபாவளிக்கு 90 நாள்களுக்கு முன்னதாகவே சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிவிக்கும்.

இதற்கான சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு, அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒட்டப்படும். தெற்கு ரயில்வேயின் இணையதளத்திலும் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும். ஆனால், இம்முறை சிறப்பு ரயில் சேவை குறித்து எவ்விதத் தகவலும் இதுவரை இல்லை.

தெற்கு ரயில்வே மெüனம்:தீபாவளிக்கு 33 நாள்களே உள்ள நிலையில், சிறப்பு ரயில்கள் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

சென்னை- நாகர்கோவில், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஓணம் மற்றும் நவராத்திரி சிறப்பு ரயில்களை மேலும் சில நாள்களுக்கு நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை-திருச்சி-தஞ்சை-கும்பகோணம்- திருவாரூர் மார்க்கத்தில் ஒரு சிறப்பு ரயில் சேவை கூட இதுவரை அறிவிக்கப்படவில்லை.

500 விரைவு பஸ்கள்: இந்நிலையில், சென்னையில் இருந்து பல்வேறு முக்கிய இடங்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் 500 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.

சென்னையில் இருந்து மட்டும் தினமும் 900 விரைவு பஸ்கள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதுதவிர தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இதர போக்குவரத்துக் கழகங்களிடம் இருந்து சுமார் 300 "அல்ட்ரா டீலக்ஸ்' பஸ்களை பெற்று இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கோயம்பேடு, தியாகராயநகர், தாம்பரம், பிராட்வே பஸ் நிலையம் ஆகிய இடங்களில் விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்யலாம். இதற்கான தொ.பே. எண்- 24794709, 24794705.

இதே போல தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் உள்ள 33 மையங்களிலும் முன்பதிவு செய்யலாம். 43 அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

source : dinamani 15 sep 2009