Nagaratharonline.com
 
திருமண பதிவு : இணைக்க வேண்டிய சான்றுகள்  Dec 17, 09
 
இணைக்க வேண்டிய சான்றுகள்


சிவகங்கை : திருமண பதிவுக்கு விண்ணப் பிப்போர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து பத்திரவு பதிவு துறை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த நவ. 24 ம் தேதி முதல் அனைத்து மத திருமணங்களையும் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. திருமணம் முடிந்த 90 நாளுக்குள், திருமணம் நடந்த எல்லைக்கு உட்பட்ட சார் பதிவாளரிடம் கட்டாயம் பதிய வேண்டும். இதற்கான விண்ணப்பம் இலவசமாக பதிவு அலுவலகத்தில் கிடைக்கும்.
இணைக்க வேண்டிய சான்று: திருமண தம்பதியரின் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வருமான வரி அடையாள அட்டை (பான் கார்டு), ரேஷன் கார்டு, அரசு, சார்பு நிறுவனங்கள் வழங்கிய போட்டோ அடையாள அட்டை, வங்கி, தபால் அலுவலக பாஸ் புத்தகம், ஓய்வூதிய புத்தகம், ஊனமுற்றோர் சான்று, துப்பாக்கி லைசென்ஸ், பிறப்பு, பள்ளி, கல்லூரி சான்றுகளில் ஏதெனும் ஒன்றின் நகல் வழங்க வேண்டும்.
ஆய்வு: விண்ணப்பத்தை பதிவாளர் ஆய்வு செய்வார். அதில் குறையுள்ள, போதுமான தகவல் இல்லாத, பதிவு கட்டணம் 100 ரூபாய் இணைக்காத விண்ணப்பங்களின் மீது குறிப்பாணை அனுப்பப்படும். அதை பெற்ற ஏழு நாட்களுக்குள் குறைகளை சரி செய்து, விண்ணப்பதாரர் மீண்டும் அனுப்ப வேண்டும்.
தண்டனை: எந்த ஜாதி, மதமாக இருந்தாலும் திருமண பதிவு கட்டாயம். உரிய நாட்களில் பதிவு செய்யாதது, திருமண பதிவு விண்ணப்பத்தில் தவறான தகவல் தருதல், அவற்றில் விதிமீறல்கள் இருந்தால் குற்றவழக்கு பதிவு செய்யப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை விதிக்கப்படும்.
பார்க்க வசதி: திருமண பதிவு ஆவணம் மக்களின் பார்வைக்காக அலுவலகத்தில் வைக்கப்படும். பதிவேட்டை பார்க்க விரும்புவோர் 15 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். திருமணம் பதிவு செய்யப்படவில்லை என்ற சான்று பெற 10 ரூபாய் செலுத்த வேண்டும். திருமண பதிவு குறித்த மற்ற விபரங்களை பத்திர பதிவு அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.

source : Dinamalar 18/12/09