Nagaratharonline.com
 
மவுசு குறையாத செட்டிநாடு கூடை : கை கொடுக்கும் குடிசை தொழில்  Dec 14, 09
 
பாலிதீன் பை கலாச்சாரம் பரவி வரும் நிலையிலும், செட்டிநாடு ஒயர் கூடைகளுக்கு மவுசு குறையவில்லை. காரைக்குடி ஆத்தங்குடியில் இக்கூடைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. இங்கு 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை தொழிலாக ஒயர் கூடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நவநாகரிக உலகில் வித விதமான பாலிதீன் பைகள் முக்கிய இடத்தை பிடித்த போதும், நகரத்தார்கள் இக்கூடை பயன்பாட்டை இன்னும் மறக்கவில்லை. இச்சமூகத்தினருக்காகவே கூடைகள் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றன.
இதற்கு வெளியூர்களிலும் மசுவு அதிகம். குழந்தை முதல் வயதானவர்கள் வரை கூடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து கூடை கொண்ட "செட்' அதிகளவு விற்பனையாகிறது. சாப்பாடு கூடை, பழ கூடை, பூஜை கூடை என உற்பத்தி செய்யப்படுகின்றன. திருமணம், விழாக்களில் பங்கேற்போருக்கு அன்பளிப்பாக கூடைகள் வழங்கும் பழக்கம் இன்றவும் உள்ளது. மதுரை, திருச்சி, கோவை, பெங்களூர், கொடைக்கானல், ஊட்டிக்கு அதிகளவு "ஷாப்பிங்' கூடைகள் அனுப்பப்படுகின்றன.
கூடை தயாரிக்கும் தெய்வானை கூறுகையில், ""வீட்டு வேலைகள் தவிர மற்ற நேரத்தில் கூடை தயாரிப்பில் ஈடுபடுகிறேன். குடும்பத்தில் உள்ள அனைவரும் இத்தொழில் செய்கின்றனர். ஒரு நாளுக்கு மூன்று கூடைகள் மட்டுமே தயாரிக்க முடியும். செட் கூடைகள் 250 முதல் 500 ரூபாய் வரை விற்கிறேன். மற்ற இடங்களில் இக்கூடையின் விலை அதிகம். இதன் மூலம் போதுமான வருமானம் கிடைக்கிறது. கூடைகளுக்கு வெளியூர்களில் நல்ல வரவேற்பு உள்ளது. பல ஆண்டுகள் வரை பயன்தரக்கூடியவை. சுற்றுலா பயணிகள் இக்கூடைகளை அதிகம் வாங்கி செல்கின்றனர். இத்தொழில் பலரது வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது,'' என்றார்.

dinamalar 15/12/09