Nagaratharonline.com
 
திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டின் அவலம் நாள்தோறும் பயணிகள் கடும் அவதி  Apr 28, 12
 
திருச்சியில் சென்ட்ரல், சத்திரம் என இரண்டு பஸ் ஸ்டாண்டுகள் உள்ளன.
மிகவும் பிரசித்திப் பெற்ற இந்த சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டின் நிலை தான் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பயணிகள் நடந்து செல்ல சிறயளவு நடைபாதைகள் இருந்தும், நடக்க முடியாத அளவுக்கு ஆக்ரமிப்புக்கப்பட்டுள்ளது.
நடைபாதையை ஒட்டியுள்ள ஹோட்டல், டீக்கடை, ஃபேன்ஸி ஸ்டோர், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், மளிகை என அனைத்து கடைகளும் பாரபட்சமின்றி நடைபாதையை ஆக்ரமித்துள்ளன.
இது போதாதென்று பூக்கடை, வாட்ச் ரிப்பேர் கடை, செருப்பு தைக்கும் கடை என நூற்றுக்கும் மேற்பட்ட குட்டிக்குட்டி கடைகள் முளைத்துள்ளன. இதனால், பயணிகள் நடந்து செல்ல முடியாமலும், மழை, வெயில் என எதற்கும் ஒதுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் இதை கண்டு கொள்ளவில்லை. "செவிடன் காதில் ஊதிய சங்கு' போல இந்த கோரிக்கை மாநகராட்சி அதிகாரிகளின் காதுகளில் விழவில்லை.
பஸ் ஸ்டாண்டுக்கு அசந்து வரும் பயணிகளிடமிருந்து நகை, பணத்தை திருடும் கும்பல் ஒன்று வியாபாரிகள் போர்வையில் வலம் வருகிறது. தவிர, சிறுவர் முதல் முதியவர் வரை என பிச்சையெடுத்து சம்பாதிக்கும் கூட்டத்துக்கும் பஞ்சமில்லை.

இரவு 8 மணி ஆனால் போதும், சிறுநீர் கழிக்குமிடம், டீக்கடை, நடைபாதை என அனைத்து இடங்களிலும் ஒரு கூட்டம் நின்று கொண்டு, பயணிகளிடம், "ரூம் வேணுமா சார். நல்லா இருக்கலாம்' என்று படுத்தி எடுக்கின்றனர். மேலும், ஓரினச்சேர்க்கையாளர்களின் தொல்லையும் அதிகம்.
பயணிகளை காக்க வேண்டிய போலீஸார், ரவுண்ட்ஸ் என்ற பெயரில் வலம் வந்து தங்களது பாக்கெட்டை நிரப்புவதிலேயே குறியாக இருக்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள தள்ளுவண்டி ஹோட்டல், உள்ளே உள்ள கடைகளில் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.

source ; Dinamalar