Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி விழா  Dec 11, 09
 
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி நிறைவு நாள் விழாவையொட்டி, தீர்த்தவாரி விழா நடைபெற்றது.

பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா 10 நாள்களாக நடைபெற்று வந்தது. கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த விழாவை முன்னிட்டு, தினந்தோறும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று காலை, சண்டிகேசுவரர் கோயில் குளக்கரையில் விநாயகர் எழுந்தருளினார்.

அப்போது, குளக்கரையில் அங்குச தேவருக்கு சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் தலைமையில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர், திருக்குளத்தில் சோமசுந்தர குருக்களால் தீர்த்தவாரி விழா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, சுவாமிகளின் திருவீதியுலா நடைபெற்றது.

பின்னர், மதியம் 2.30. மணியளவில் 18 படி பச்சரிசி மாவில் செய்யப்பட்ட ராட்சத முக்குருணி கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

அன்று முழுவதும் கற்பக விநாயகர் தங்கக் கவசத்தில் காட்சி அளித்தார். இரவில் பஞ்ச மூர்த்திகளின் திருவீதியுலா நடைபெற்றது.

source : Dinamani 11/12/09