Nagaratharonline.com
 
கிடப்பில் சாலை அகலப்படுத்தும் பணி : அதிகாரிகள் அலட்சியம்  Dec 9, 09
 
அதிகாரிகளின் அலட்சியத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓ. சிறுவயல் சாலை அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
காரைக்குடி கழனிவாலில் இருந்து ஓ. சிறுவயல் வழியாக திருவேலங்குடி வரை சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது. 15 கி.மீ., சாலையில் பாலங்கள் சீரமைக்கப்பட்டன. கண்மாய் அருகே உள்ள சிறு பாலம் அகலப்படுத்தும் பணி துவங்கியது. சிமென்ட் குழாய்கள் பதிப்பதற்காக ரோட்டின் குறுக்கே பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பணி திடீரென நிறுத்தப்பட்டது.

அதிகாரிகளின் அலட்சியத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.ஓ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி, திருவேலங்குடிக்கு செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். மழை காலங்களில் கண்மாயில் தண்ணீர் நிரம்பும் போது, இந்த சாலையை மூடிவிடுவதால் பல கி.மீ., சுற்றி செல்லும் நிலை உள்ளது.ஓ.சிறுவயல் ஊராட்சி தலைவர் அழகப்பன் கூறுகையில், ""கழனிவாசல்- திருவேலங்குடி வரை இரண்டு கோடி ரூபாயில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது. ஓ.சிறுவயல் அருகே தோண்டப்பட்ட பாலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி நடக்காமல் கிடப்பில் உள்ளது. இதுகுறித்து கூடுதல் கலெக்டர், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் புகார் செய்தேன். நிதி பற்றாக்குறையால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது என்றும், திருத்தப்பட்ட மதிப்பீடு வந்தவுடன் பணி நிறைவு பெறும் எனவும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பதில் கூறினர்,'' என்றார்.கலெக்டர் கவனத்திற்கு: போக்குவரத்து மிகுதியான இச்சாலையில் "மெகா' பள்ளத்தால் பெரிய விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. பணியை விரைந்து முடிக்க கலெக்டர் மகேசன் காசிராஜன் முயற்சி எடுக்க வேண்டும்.


source : Dinamalar 07/12/09