Nagaratharonline.com
 
மதுரையில் தமிழ் இசைக் கல்லூரி  Mar 8, 12
 
மதுரையில் தமிழ் இசைக்கல்லூரி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை (மார்ச் 6) நடைபெறுகிறது.
முதல் ஆண்டில் சேரும் மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம் இலவசம் என தமிழ் இசைச் சங்க நிர்வாக அறங்காவலர் எம். சேக்கப்பச் செட்டியார் தெரிவித்தார்.
மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரை இசைச்சங்கம் சார்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனரகத்துடன் இணைந்து, ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரியை நடத்த உள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தர் எம்ஏஎம் ராமசாமி முன்னிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம். ராமநாதன் தமிழ் இசைக் கல்லூரியை தொடங்கி வைக்கிறார்.
இதில், மதுரை வருமான வரி ஆணையர் எம். கிருஷ்ணசாமி முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை வழங்கி வாழ்த்திப் பேசுகிறார்.
ராஜா முத்தையா மன்ற வளாகத்தில் இக் கல்லூரி செயல்படும்.
முதல் ஆண்டில் பி.ஏ. பாட்டு, வயலின், வீணை பட்டப் படிப்பும், சான்றிதழ் படிப்புகளும் முதல் கட்டமாகத் தொடங்கப்படுகிறது.
விரைவில் மிருதங்கம், பரதநாட்டியம், தவில், நாதஸ்வரம், நட்டுவாங்கம், தேவாரம், புல்லாங்குழல் படிப்புகளும் தொடங்கப்படும்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் பட்டப் படிப்பிலும், எஸ்எஸ்எல்சி படித்தவர்கள் பட்டயப் படிப்பிலும் சேரலாம். வயது வரம்பு கிடையாது.

source : Dinamalar