Nagaratharonline.com
 
சிவனை வழிபட்டால் செல்வநிலை உயரும்- சிவல்புரி சிங்காரம் பேச்சு  Feb 26, 12
 
மகாசிவாரத்திரியையட்டி செட்டிநாடு கிரிவலக்குழு தலைவர் சிவல்புரி சிங்காரம் தலைமையில் சிவாலய தரிசனம் செய்ய யாத்திரை புறப்பட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 25-க்கும் அதிகமான கார்களில் சென்று கலந்து கொண்டனர். முதலில் அவர்கள் கீழச்சிவல்பட்டியில் உள்ள பாடுவார் முத்தப்பர் கோட்டத்தில் வழிபட்டனர்.

பிறகு, விக்னேசுவரன், நந்தீசுவரன், சர்வேஸ்வரன், சனீஸ்வரன், முனீஸ்வரன் ஆகிய 5 ஈசுவரன்களும் ஒரே இடத்தில் இருந்து அருள்பாலிக்கும் மலையக்கோவிலுக்கு சென்று வழிபாட்டை தொடங்கினர். அங்கிருந்து பக்தர்கள் அனைவரும் நற்சாந்துபட்டி, பனையபட்டி, குழிபிறை, ராங்கியம், திருமயம், குருவிக்கொண்டான்பட்டி, ஆவணிபட்டி, இளையாற்றங்குடி, கீழச்சிவல்பட்டி, இரணியூர், சிறுகூடல்பட்டி, பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி, காளையார்கோவில், பட்டமங்கலம், மாத்தூர் ஆகிய கோவில்களுக்கு சென்று சிவாலய தரிசனம் செய்தனர். இரும்பை தங்கமாக மாற்றிய கொங்கணமுனிவர் வாழ்ந்த ஊரான காரைக்குடி அருகில் உள்ள மாத்தூரில் ஐநூற்றீசுவரர், பெரியநாயகி அம்மன், மகிழமரத்தடி முனிவரை அவர்கள் வழிபட்டனர்.

அதன்பின் நடந்த ஆன்மிக விழாவில் சிவல்புரி சிங்காரம் பேசியதாவது:-

சிவராத்திரியன்று இரவில் ஆறுகாலங்களையும் பார்த்தோருக்கு சீரான வாழ்க்கை அமையும். செல்வந்தராகும் வாய்ப்பு கிட்டும். இந்த விரதத்தை கடைபிடித்துதான் திருமால் சக்கராயுதத்தை பெற்றார். பிரும்மா சரஸ்வதியை அடைந்தார். அர்ச்சுனன் பாசுபதம் என்ற அஸ்திரத்தை பெற்றான். பார்வதிதேவி சிவனின் இடப்பாகத்தில் இடம்பிடித்தாள். பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான். இந்த நாளில்தான் திருக்கடையூரில் மார்க்கண்டேயனுக்காக சிவன் காட்சி கொடுத்தார். இந்த நாளில்தான் கண்ணப்பநாயனாரும் சிவன் அருள் பெற்றார். இப்படிப்பட்ட திருநாளில் சிவபெருமானை ஆலயங்கள்தோறும் சென்று ஆறுகாலத்திலும் வழிபட்டவர்கள் நூற்றாண்டுகாலம் நோய் நொடியின்றி வாழ்வர். செல்வமும் செல்வாக்கும் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர்கள் கவிஞர் கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் ராவணன் வழிபட்ட சிவலிங்கத்தையும், காளையார்கோவிலில் தங்க ஊஞ்சலில் இருந்து அருள்பாலிக்கும் சொர்ணகாளீசுவரர், சொர்ணவல்லி அம்பாளையும் ஒரே சிவலிங்கத்தில் இருக்கும் 1008 சிவலிங்கத்தையும் கண்டு தரிசித்தனர்.

source : Maalai malar