Nagaratharonline.com
 
பழநி கோயிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்  Jan 31, 12
 
பழநி: அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். மார்கழி மாதம் துவங்கியது முதல் சென்னை, ஈரோடு, மதுரை, தேனி, திருப்பூர், மற்றும் அறுபடை வீடுகள் கொண்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் 500 கி.மீட்டர் தொலைவுக்கும் அப்பால் இருந்து பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.



தைப் பொங்கல் திருநாளான இன்று லட்சக்கணக்கானவர்கள் பழநி நோக்கி புறப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் தேவையான வசதிகள் செய்து கொடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. செம்பட்டி, மூலச்சத்திரம், தாராபுரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மெகா பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தர்கள் ஓய்வெடுத்து கொள்ளலாம். இரவு நேரத்தில் விபத்துக்களை தடுக்க ஒளிரும் குச்சிகள் வழங்கப்படுகிறது. ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்படுகிறது. பழநி திண்டுக்கல் ரோட்டில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு காவி, பச்சை, மஞ்சள் உடைகள் அணிந்த பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கின்றனர்.



தைப்பூசம் கொண்டாட்டம் முழு விவரம் : பக்தர்களின் பாதயாத்திரைக்கென்று பெயர் பெற்ற பழநி தைப்பூச திருவிழா வரும் பிப்.1-ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிப்,7-ல் தைப்பூச தேரோட்டம் நடைபெறும்.பழநி தைப்பூச திருவிழா பக்தர்களின் பாதயாத்திரைக்கும், பங்குனி உத்திரம் கொடுமுடி தீர்த்தக்காவடிக்கும் பெயர் பெற்ற திருவிழாக்கள் ஆகும்.கொடியேற்றம், சுவாமி புறப்பாடு, திருக்கல்யாணம் உள்ளிட்டவை பெரியநாயகியம்மன் கோயிலில் நடைபெறும்.பிப்.1-ல் காலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். கொடிப்படம் நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் கொடிப்படம் கொடிகட்டி மண்டபத்தை வந்தடையும். காலை 11 மணிக்கு மேல் தைப்பூச கொடியேற்றம் நடைபெறும். உச்சிக்காலத்தில் மலைகோயிலிலும், திருஆவினன்குடிகோயிலிலும் காப்புக்கட்டுதல் நடைபெறும். கொடியேற்றத்துடன் துவங்கி விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும். பெரியநாயகியம்மன் கோயில் உட்பிரகாரத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு பத்து நாட்களுக்கும் யாகசாலை பூஜை நடைபெறும்.விழாவின் ஆறாம் நாளான பிப்.6-ல் இரவு 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்த பின், இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளித்தேரோட்டம் நடைபெறும்.






விழாவின் ஏழாம் நாளான பிப்.7-ல் தைப்பூசமாகும். காலை 5 மணிக்கு மேல் சுவாமி சண்முகநதிக்கரையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை தேர் ஏற்றம் செய்யப்பட்டு மாலை 4.35 மணிக்கு மேல் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும்.விழாவின் பத்தாம் நாளான பிப்.10-ல் இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகியம்மன் கோயில் அருகே உள்ள தெப்பத்தில் தெப்போற்சவம் நடைபெறும். தைப்பூசத்திருவிழாவையொட்டி சுவாமி வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி திருவுலா வருவார். தைப்பூச திருவிழாவிற்கு உண்டான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் மங்கையற்கரசி ஆகியோர் செய்து வருகின்றனர்.