Nagaratharonline.com
 
பழநி அடிவாரத்தில் தத்தளிக்கும் பக்தர்கள் அதோகதி !  Jan 21, 12
 
பழநி அடிவாரத்தில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் பரிதவிக்கின்றனர். ஆனால், பக்தர்களை ஒழுங்குபடுத்த நினைக்காத போலீசார், புறநகர் வாகன "தணிக்கை' யில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு, பழநிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், அடிவாரம் ரோடு, சன்னதி ரோடு, நான்கு கிரிவீதிகளில், பக்தர்கள் நகர முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

போலீஸ் ஒத்துழைப்பு இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களைக் கூறி, கோயில் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர், இப்பிரச்னையில் இருந்து நழுவிவிடுகின்றனர். பழநிக்கு வரும் பக்தர்கள், நெரிசலில் சிக்கித் தவிப்பதுடன், பணம், பொருட்களை பறிகொடுக்கும் அவலமும் அரங்கேறுகிறது. போதிய போலீசார் இல்லை என, பாதுகாப்பு பணியிலும் பெயரளவுக்கு, "கணக்கு' காட்டப்படுகிறது. "டோல்கேட்', லாட்ஜ்களில் நிறுத்தப்படும் வாகனங்களில், போலீசாரின் வசூல் வேட்டைக்கு குறைவில்லை. போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசார், புறநகரில் வாகன "தணிக்கை' செய்வதை அதிகம் விரும்புகின்றனர். சண்முகநதி, வண்டிவாய்க்கால், புளியம்பட்டி போன்ற இடங்களில் நின்று, வெளிமாநில வாகனங்களை "தோண்டி துருவுகின்றனர்'. இதனால் பக்தர்களை ஒழுங்குபடுத்த போதிய போலீசார் இல்லை. பக்தர்களின் அவலத்தை போக்க, கோயில், நகராட்சி நிர்வாகத்தினரும் அலட்சியமாகவே உள்ளனர்.

source : Dinamalar