Nagaratharonline.com
 
கன்னித்தமிழ் வளர்த்த ஊர் காரைக்குடி: இயக்குநர் பாரதிராஜா  Jan 20, 12
 
திருநெல்வேலி பிள்ளைத்தமிழ் வளர்த்த ஊர். காரைக்குடி கன்னித்தமிழ் வளர்த்த ஊர் என்றார் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா.
காரைக்குடியில் ரோட்டரி சங்கம், ரோட்டரி ஹெரிடேஜ் சங்கம் மற்றும் தமிழ்த்தாய் கலைக்கூடம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் தினம் மற்றும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியது:
எனக்கு சினிமா அங்கீகாரம் கொடுத்தது என்றாலும், தமிழ்தான் எனக்கு சமூக அங்கீகாரம் தந்தது. விருதைவிட மக்களிடம் கிடைக்கின்ற சமூக அங்கீகாரமே எனக்கு பெரியது. மதுரை செந்தமிழ் வளர்த்த இடம் என்பதுண்டு. இரண்டு மண் தான் தமிழை வளர்த்தது. அது திருநெல்வேலி பிள்ளைத்தமிழ், காரைக்குடி கன்னித்தமிழ். காரைக்குடி கலாசாரம் கொண்ட பூமி. இங்கு தண்ணீர் இல்லை. ஆனால், நிறைய குளங்களை வெட்டியிருக்கிறார்கள். தண்ணீர் இல்லாமல் இத்தனை பெரிய வீடுகளை எப்படி கட்டினர் என்று எண்ணுவதுண்டு. கலை உலகுக்கு ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரைத் தந்தது இந்த மண்.
வள்ளல் எனச் சொல்வதற்கு மிகவும் பொருத்தமுள்ளவர் அழகப்பச் செட்டியார். தன் வாழ்நாளில் மிகப் பெரிய சாதனையைப் பதிவு செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். கவியரசர் கண்ணதாசன் நின்ற இடத்திலிருந்து சரளமான பாடல்களை எழுதியவர். அவருக்கு இங்கு மணிமண்டபம் உள்ளது. இங்கு கம்பன் மணிமண்டபம் உள்ளது. தமிழ்த் தாய்க்கு கோயில் கட்டிய ஊரும் காரைக்குடிதான். நான் திரைப்படத்தில் வட்டாரத் தமிழைத்தான் சொல்லி வருகிறேன். ஆனால், இலக்கியத் தமிழை கலை உணர்வோடு சொல்வது காரைக்குடிதான்.
தமிழைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஒரு சமுதாய முன்னேற்றத்துக்கு மொழியின் வளர்ச்சி தேவை. மற்ற மாநிலங்களில் அந்த மாநிலத்தைத் தவிர வேறு யாரும் அரசியல் பண்ண முடியாது. தமிழ்நாட்டில் மட்டும் தான் யார் வேண்டு மானாலும் அரசியலும் பண்ண முடியும், எந்த உரிமையையும் கோர முடியும். நம் முன்னோர்கள் செய்த சிறு தியாகம்தான் அணைப் பிரச்னையில் இப்போது பெரிதாகிவிட்டது. எனவே, அனைவரும் ஒன்று சேர்ந்து அரசியல் பாகுபாடு இல்லாமல் போராட வேண்டும் என்றார்.



source : Dinamani