Nagaratharonline.com
 
திருப்பத்தூர்:புத்தகம் வாசிப்பது சுவாசிப்பதற்கு சமம்  Dec 1, 09
 
திருப்பத்தூர், நவ. 29: புத்தகம் வாசிப்பது, சுவாசிப்பதற்கு சமம் என, திருப்பத்தூர் அண்ணா கிளை

நூலகத்தில் நடைபெற்ற தேசிய வார விழா மற்றும் புரவலர்களுக்குப் பாராட்டு விழாவில், குன்றக்குடி

பொன்னம்பல அடிகளார் பேசினார்.

விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது:

தற்போது, இன்டர்நெட், இ-மெயில் போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள போதிலும்,

மனிதன் புத்தகம் வாசிப்பதன் மூலமே முழுமையான அறிவைப் பெறமுடியும்.

புத்தகம் எக்காலத்திலும் நம்மைவிட்டு விலகாத உறவு. புத்தகம் பல நாட்டின் வரலாறுகளை மாற்றி

அமைத்திருக்கிறது.

உலகில் சண்டை இல்லாத நிலையை, நல்ல புத்தகங்களை படிப்பதன் மூலமே உருவாக்க முடியும்.

மரங்கள் கழிவு நீரை எடுத்துக்கொண்டு நமக்கு பயன்தரும் காய், கனிகளை தருவதைப் போன்று,

நல்ல கருத்துகளையுடைய புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் சுதந்திர வேட்கையைத் தூண்டியதும் புத்தகமே. காந்திக்கும், பாரதிக்கும் புத்தகமே


சொத்தாகத் திகழ்ந்துள்ளன.

ஆலயத்துக்கு முன் அமைந்திருக்கும் இந்த அறிவின் ஆலயத்துக்குப் புரவலர்களாக


சேர்ந்தவர்களையும், சேர இருக்கின்றவர்களையும் மனதாரப் பாராட்டுகிறேன். வாசிக்கும் பழக்கம்


உடையவனே சுவாசிக்கத் தகுதியுடையவன் என்றார்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். நூலகர் மகாலிங்க ஜெயகாந்தன்


வரவேற்றார்.

இதில், ஒன்றியக் குழுத் தலைவர் வள்ளி சிதம்பரம், முன்னாள் தலைவர் கரு. சிதம்பரம்,


எழுத்தாளர்கள் சந்திரகாந்தன், பேனா மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Source: Dinamani 01/12/09