Nagaratharonline.com
 
ரூ.3 கோடி செலவில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கணினி மயம் மண்டல இணைப்பதிவாளர் தகவல்  Dec 1, 09
 
சிவகங்கை, : சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.3 கோடி மதிப்பில் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது என மண்டல இணைப்பதிவாளர் ஜெயம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழக அரசு பண்ணை சாராக்கடன் பெற்றவர்கள் பயன்பெறும் வகையில் அறிவித்துள்ள வட்டி குறைப்பு திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் கடன் பெற்ற 4463 பேருக்கு ரூ.793.41 லட்சம் வட்டி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் 123 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.94.03 கோடி வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இதுவரை ரூ.61.12 கோடி தமிழக அரசு வழங்கியுள்ளது.
2009&10ம் ஆண்டிற்கு பயிர் கடனாக ரூ.20 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.1267.28 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2009&10ம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் 108 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 600 கூட்டு பொறுப்பு குழுக்கள் அமைத்து, ஒரு குழுவிற்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் இதுவரை ரூ.60 லட்சம் வரை சுழல் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் 2008&09, 2009&10 ஆகிய 2 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட கூட்டு பொறுப்புக்குழுக்களுக்கு பயிர் கடன் வழங்க ரூ.551.28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சிறுவணிகர்கள் கூட்டு பொறுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, 83 குழுக்களுக்கு ரூ.24.27 லட்சமும், தனிநபர் கடனாக 296 பேருக்கு ரூ.14.91 லட்சம் என மொத்தம் சிறுவணிக கடனாக ரூ.39.18 லட்சம் வழங்கப்பட்டுள்ளன. நலிவடைந்த தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களுக்கு சிறப்பு நகை கடன் திட்டத்தின்கீழ் 5% வட்டியில் 77 கடன் சங்கங்களுக்கு ரூ.1540 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடன் வழங்கப்பட்டு வருகின்றன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், 81 கடன் சங்கங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி மூலம் ரூ.3896 லட்சம் பெறப்பட்டு, இதுவரை ரூ.1364.72 லட்சம் அளவிற்கு நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.3 கோடி மதிப்பில் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source:Dinakaran 1/12/09