Nagaratharonline.com
 
பாகனேரி மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு  Dec 16, 11
 
பாகனேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பாகனேரி மருத்துவமனை ரூ. 68 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு, அறுவை சிகிச்சைக் கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் செயல்படத் துவங்கவில்லை என, அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ஆட்சியர் அந்த மருத்துவமனைக்கு புதன்கிழமை திடீரென சென்றார்.
அப்போது, இந்த மருத்துவமனையில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் பணியில் உள்ளதாகவும், தற்போது பொது மற்றும் மகப்பேறு மருத்துவம் பார்க்கப்படுவதாகவும், மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுத்து, புதிய அறுவைச் சிகிச்சைக் கூடம் உள்ளிட்டவற்றை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.
இது குறித்து, சுகாதாரத் துறை இணை இயக்குநர் ரஞ்சனி தேவியிடம் ஆட்சியர் விசாரிக்கையில், அறுவைச் சிகிச்சைக் கூடம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில்தான் மின்சார இணைப்புப் பணிகள் நிறைவடைந்தன. அறுவைச் சிகிச்சைக் கூடம், அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்றது என்பதற்கு மருத்துவத் துறையின் சான்றைப் பெறவேண்டும்.
அதற்கான பரிசோதனைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவை, நிறைவடைய இன்னும் 2 மாதங்களாகும். அதற்குள், மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர், உபகரணங்களைப் பெற்று புதிய பிரிவு செயல்பட வைக்கப்படும் என்று விளக்கமளித்தார்.


source : Dinamani