Nagaratharonline.com
 
இன்று கார்த்திகை தீபம்: ரூ.17 கட்டணத்தில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்; பஸ்களில் ரூ.62  Dec 7, 11
 
புதுச்சேரி, டிச.7: கார்த்திகை தீபத் திருநாளையொட்டி புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு ரூ.17 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பஸ் கட்டணம் ரூ.47 மற்றும் ரூ.62 என வசூலிக்கப்படுகிறது.

ரயில் சேவை: திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற உள்ள தீபத் திருநாளையொட்டி சென்னையில் இருந்து காட்பாடி, வேலூர் வழியாகவும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாகவும் 2 சிறப்பு ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. ÷புதுச்சேரியில் இருந்து வியாழக்கிழமை பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 4.30 மணிக்கு திருவண்ணாமலையைச் சென்றடைகிறது.

மீண்டும் திருவண்ணாமலையில் இருந்து இரவு 8 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் இரவு 11 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை செல்லவும், திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி வரவும் ரயில் கட்டணம் தலா ரூ.17 வசூலிக்கப்படுகிறது.

பஸ் சேவை: தமிழ்நாடு போக்குவரத்து கழக புதுச்சேரி கிளை சார்பில் புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு 30 சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி திருவண்ணாமலை கிளை சார்பிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

7-ம் தேதி மதியம் 12 மணி முதல் 10-ம் தேதி மதியம் 12 மணி வரை 30 நிமிடத்துக்கு ஒரு பஸ் வீதம் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் கூட்டத்துக்கு ஏற்றவாறு கூடுதல் பஸ்களை இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாகப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

÷சாதாரண நாள்களில் புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு ரூ.47 பஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது விடப்பட்டுள்ள சிறப்பு பஸ்களில் ரூ.62 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பஸ் கட்டணத்தை விட ரயில் கட்டணம் மிகக் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் ரயில்களில் பயணிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பஸ், ரயில் இதில் எதில் சென்றாலும் பயண நேரம் 3 மணி நேரம் தான்.

ஆனால் புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயிலில் செல்லக் கட்டணம் குறைவாகவே இருந்தாலும், புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கு போதிய பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்காததால் ஆட்டோக்களுக்கு ரூ.40 வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இரவு வேளை என்றால் இது ரூ.100 வரை கேட்பதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Source:Dinamani