Nagaratharonline.com
 
மகிபாலன்பட்டிக்கு போக்குவரத்து துண்டிப்பு  Nov 28, 11
 
விருச்சுழியாற்றில் நீர் வரத்து அதிகரித்ததையடுத்து மகிபாலன்பட்டி ஓடுபாலம் மூழ்கியது. வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

மகிபாலன்பட்டிக்கு கண்டவராயன்பட்டியிலிருந்து செல்லும் ரோட்டை விருசுழியாறு கடந்து செல்கிறது.ஆறு செல்லும் பகுதியில் தரைப்பாலம் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் இப்பகுதி கண்மாய் முழுவதும் மறுகால் செல்கிறது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையால் விருச்சுழியாற்றில் வெள்ளம் அதிகரித்தது. மகிபாலன்பட்டி அணைக்கட்டு, கண்டவராயன்பட்டி அணைக்கட்டுகளில் நீர் நிறைந்து மறுகால் செல்கிறது. மகிபாலன்பட்டி தரைப்பாலமும் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று அதிகாலை 5 மணி முதல் இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.தற்போது அபாயகரமான சூழலில் கிராமத்தினர் நடந்து செல்கின்றனர். பஸ்கள் தற்போது மாற்று வழியில் இயக்கப்படுகின்றன. மகிபாலன்பட்டி, மருத்துவக்குடிப்பட்டி, நெல்மேனிப்பட்டி,சாலைப்பட்டி,கொன்னத்தான்பட்டி, வடுகபட்டி, கருமிச்சான்பட்டி, துவார், பூலாம்பட்டி கிராம மக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

ஊராட்சித் தலைவர் சோமசுந்தரம் கூறியதாவது: ஆண்டு தோறும் ஆற்று வெள்ளம் வருவது வழக்கமாகி விட்டது. இதனால் ரோடு துண்டிக்கப்படுவதும் தொடர்கிறது. நெடுஞ்சாலைத்துறையின் இந்த ரோட்டில் சற்று உயரமாக மேம்பாலம் கட்ட வேண்டும். என்றார்.

source : Dinamalar