Nagaratharonline.com
 
தேவகோட்டை- காரைக்குடி சாலையில் பாலங்களால் வாகனங்களுக்கு இடையூறு  Sep 11, 09
 
தேவகோட்டை, செப். 10: தேவகோட்டை- காரைக்குடி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாலங்களில் இணைப்புச் சாலை சரிவர போடப்படாததால் வாகனங்களில் செல்வோருக்கு இடையூறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

திருச்சி- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை 210-ல் காரைக்குடி- தேவகோட்டை இடையே எட்டு இடங்களில் இருந்த பழைய பாலங்களை அகற்றிவிட்டு சமீபத்தில் புதிதாக பாலங்கள் போடப்பட்டன. இவற்றில் இரண்டில் இன்னும் வேலை முடியவில்லை.

கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்துத்குத் திறந்து விடப்பட்ட பாலங்களில் இரு பக்கமும் உள்ள இணைப்புச் சாலையை தார்ச்சாலையாக அமைக்காமல் கிராவல் பரப்பி விட்டுவிட்டனர். இதனால் காற்றிலும் மழையிலும் கொட்டியிருந்த கிராவல் அடித்து செல்லப்பட்டு விட்டது.

பாலங்களின் இரு பக்கமும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் முதல் பஸ்கள் வரை டயர்கள் அடிக்கடி பழுதாகின்றன.

மேலும் சாலை நன்றாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பள்ளத்தை எதிர்பாராமல் வேகமாகச் செல்வதால் அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது.

முள்ளிக்குண்டு அருகே சமீபத்தில் வேகமாகச் சென்ற ஒருவர் தூக்கி வீசப்பட்டு அருகிலிருந்த கால்வாயில் விழுந்து உயிரிழந்தார்.

இவ்வாறு இணைப்புச் சாலைகளுக்குத் தார் போடாமல் இருப்பதற்கு அணைத்து வேலைகளையும் மதுரைக்கு அருகிலுள்ள ஒரே நபரே ஒப்பந்தத்தை எடுத்திருப்பதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. இதை அவ்வப்போது ஆய்வு செய்யும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் கண்டும் காணாமலும் செல்கின்றனர்.

வாகனங்களில் செல்வோருக்கு இடையூறாக இருக்கும் பால இணைப்புச் சாலைகளை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Source : Dinamani Sept 11th 2009