Nagaratharonline.com
 
காரைக்குடியில் தொடர் மழையால் காட்டன் சேலை உற்பத்தி பாதிப்பு  Nov 8, 11
 
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நெசவாளர் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால், காட்டன் சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நெசவாளர்கள் பிழைப்பு தேடி வெளிமாவட்டங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. காரைக்குடி, திருப்புத்தூர், கோவிலூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட தறிகள் மூலம் 5,000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தொழில் செய்கின்றனர்.காரைக்குடியில் கருணாநிதி நகர், சத்தியமூர்த்தி நகர், வைத்தியநாதபுரம், வீரையன் கண்மாய், நெசவாளர் காலனி, காளவாய் பொட்டல் பகுதிகளில் ஏராளமான நெசவாளர்கள் வசிக்கின்றனர்.இவர்கள் தயாரிக்கும் செட்டிநாடு காட்டன் சேலைக்கு மவுசு அதிகம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இச்சேலைகளை அதிகம் வாங்குகின்றனர்.மழை பாதிப்பு:காரைக்குடியில் பெய்து வரும் தொடர் மழையால், மழை நீர் நெசவாளர்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிட்டது. "தறி' கூடம் தண்ணீரில் மிதக்கிறது. மழை நீர் வடிய பல நாட்களாகும் என்பதால், காட்டன் சேலை நெசவு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பிழைப்பிற்காக நெசவாளர்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்கின்றனர்.கைத்தறி நெசவாளர் சங்க சிவகங்கை மாவட்ட செயலாளர் பழனியப்பன் கூறியதாவது: தறி கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. இதனால், நெசவாளர்கள் பிழைக்க வழியின்றி மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டைக்கு மாற்று தொழிலுக்காக சென்றுவிட்டனர்.நலிவடைந்து வரும் காட்டன் சேலை உற்பத்தியை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கவேண்டும், என்றார்


Source:Dinamalar